இது ‘அந்த இன்னோன்னு எங்கே?’ ரக காமெடி இல்லே…!

˃ மேனேஜர் சார்.. மேனேஜர் சார்… இவன் என்ன பத்தி தப்பு தப்பா பேசுறான். தப்பு தப்பா பேஸ்புக்ல எழுதறான்…

˄ டேய் படவா.. அப்படி என்னடா எழுதின..?

˂ ஹையோ… நான் அப்டில்லாம் தப்பு தப்பா எதுவும் எழுதலீங்களே! உண்மையை உள்ளதை ஒழுங்கானதை எழுதி பேசித்தானுங்களே பழக்கம்!

˃ இல்ல சார்.. அவன் தப்பு தப்பா எழுதறான். என்ன பத்தி இனிமே ஒழுங்கா உள்ளத பேசச் சொல்லுங்க.. எழுதச் சொல்லுங்க…

˄ டேய் பாவம்.. கெஞ்சுறானுல்ல… ஒழுங்கா இனிமே அவனப் பத்தி பேசு.. எழுது.. என்ன சரியா?

˂ சரிங்க.. சார்! அப்டியே செய்யறேனுங்க…! அண்ணன் நல்லவரு, வல்லவரு, நாணயமானவரு, கெட்டிக்காரரு, பெரீய்ய படிப்பாளி, அனுபவஸ்தரு, பெரியவங்கள மதிக்கிறவரு, உடன் இருக்கறவங்கள அரவணைச்சு காப்பாத்துறவரு, பொண்டாட்டிக்கு துரோகம் செய்யாதவரு, மத்த பொம்பளைங்களைக் கண்டாலே தூர விலகி ஓடுறவரு, நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்குறவரு, தாராள குணம் கொண்டவரு, கஞ்சத்தனமே இல்லாதவரு, பிச்சக்காரங்களுக்கு தன் சொந்தக் காசை எடுத்து பிச்சை போடுருவரு, தன் சொந்தக் காசில் தன் சொந்த செலவை எல்லாம் பாத்துக்கிடறவரு, ஆபீஸ்லேர்ந்து நயா பைசாகூட தப்பா எடுத்து செலவழிக்காதவரு, ஆபீஸ்லேர்ந்து குண்டூசிய கூட வீட்டுக்குத் தூக்கிட்டுப் போவாத உத்தமரு, காந்தி பாரதி வள்ளுவரு புத்தருன்னு நாம பாடத்துல படிச்சவங்கள எல்லாம் இவர் வடிவத்துல நேர்லயே பாக்கலாம்… அப்டின்னு இனிமே சொல்லுறேனுங்க.. எழுதறேனுங்க…!

> மேனேஜர் சார்.. மேனேஜர் சார்.. இப்பவும் இவன் என்ன பத்தி தப்பு தப்பாதான் சொல்லுறான்…