
திருவள்ளுவர் “காவி மயம்” என்றால் எதிர்ப்பு , “கமல் மையம்” என்றால் கள்ள மவுனம்!! என்னடா உங்க நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார்.
இது குறித்து அவர் கூறியபோது…
உலகப் பொதுமறை தந்த வான்புகழ் வள்ளுவனை பெருமைப் படுத்தாமல் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவிற்கு சென்னை நகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளைக் கண்டு திடுக்கிட்டுப் போயுள்ளோம்.
அதில் இடம் பெற்றுள்ள வாசகம் “அகர முதல எழுத்தெல்லாம் உலகநாயகன் முதற்றே உலகு” நம்மவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். – என்று தெய்வ வள்ளுவன் உருவத்தில் கமல் முகத்தைப் பதிய வைத்து ஜே அப்துல் ஜாபர் ,ராஜ்குமார் ஆகியோர் அச்சடித்து இருக்கிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஏற்கனவே பாரதியார் உருவ படத்தில் தன் முகத்தைப் பதித்து படம் வெளியிட்டிருந்தார்.
தற்போது வள்ளுவர் குறித்தான சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் நடிகர் கமல்ஹாசன் திருவள்ளுவர் படத்தில் திருவள்ளுவரை அவமானப் படுத்துவதாகவேதோன்றுகிறது.
திருவள்ளுவரை அவமானப்படுத்தி விட்டார்கள் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்றெல்லாம் குலைநடுங்க கத்தியவர்கள்; திருவள்ளுவரை “கமல்ஹாசன் சாயம்” பூசுவதை ஏன் எதிர்க்கவில்லை.?
திருவள்ளுவர் உருவத்தில் கமல்ஹாசன் படம் வெளியிடுவது வன்மையான கண்டனத்திற்கு உரியது.வள்ளுவன் வாசுகி என்றுதான் உதாரணம் சொல்லுவார்கள் கமல்ஹாசனும்,…….
….நடிகைகள் போல என்று யாரும் உதாரணம் சொல்ல மாட்டார்கள்.
கடவுள் வாழ்த்தின் முதல் குரலை ,கமல் வாழ்த்தாக மாற்றி அச்சிடுவது திருக்குறளை அவமதிக்கும் செயலாகும்.
இப்படி படம் அச்சிடுவது கருத்து சுதந்திரம் என்று சொல்லக் கூடிய கமல் ரசிகர்கள், மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் பிற மதத்தின் உடைய பெரியவர்களை, கடவுள்களை போல கமல் படத்தை வைத்து அச்சிட முடியுமா?
அப்படிஅச்சடித்தால் ,ஒட்டினால், அந்த மதத்தவர்கள் சும்மா இருந்துவிடுவார்களா? என்பதை தமிழ் சமுதாயம் யோசனை செய்ய வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் ராமகிருஷ்ணன் ….. இப்படி வள்ளுவருக்கு காவி வண்ணம் பூச கூடாது என்று இந்துமத வெறுப்பு எண்ணத்தோடு பேசியவர்கள், இந்த கமல் குறித்தான சுவரொட்டிக்கு என்ன கருத்து சொல்லப்
போகிறார்கள்?
தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்…. என்று கூறினார்.