
பளாரென்று கன்னத்தில் அறைந்த எஸ்ஐ. திருப்பி அடித்த ஆடு மேய்ப்பவர். உண்மையில் என்ன நடந்தது?
கன்னத்தில் பளார் என்று அறைந்த சப்-இன்ஸ்பெக்டரை ஆடு மேய்ப்பவர் திரும்ப அடித்த சம்பவம் கர்னூல் மாவட்டம் ‘ஆலூரு’ மண்டலத்தில் நடந்துள்ளது. பைக்கில் செல்லும்போது வழிவிடும் விஷயத்தில் வாக்குவாதம் முற்றி இவ்வாறு நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
எஸ்ஐ.,யை எதிர்த்து வாதாடி திரும்ப அடித்ததால் அங்கு போலீசார் கூடினர். அதைக்கண்டு ஆடு மேய்ப்பவர் நைஸாக நழுவி ஓடிப் போனார்.
‘ ஆதோனி’ செல்வதற்காக ‘ஹாலஹர்வி’ எஸ்ஐ பாலநரசிம்மலு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். ‘மனோகுர்த்தி, கோனேஹாலு’ கிராமங்களின் இடையே வழியை மறித்துச் சென்று கொண்டிருந்த ஆடுகளைக் கண்டு பைக்கை நிறுத்தினார்.
“ஆடுகளை ஓரமாக நகர்த்தாமல் என்ன செய்து கொண்டிருக் கிறாய்?” என்று ஆடுமேய்ப்பவரை திட்டியதால், “அவை வாயில்லா ஜீவன்கள். அவற்றுக்கு என்ன தெரியும்?” என்று அதே தோரணையில் ஆடு மேய்ப்பவரான பீரப்பா பதிலளித்தார்.
அது பொறுக்காத எஸ்ஐ., பாலநரசிம்மலு பைக்கை விட்டிறங்கி ஆடு மேய்ப்பவரின் கன்னத்தில் அறைந்தார். யூனிபார்மில் இல்லாமல் இருந்ததால் போலீஸ் என்று அறியாத ஆடு மேய்ப்பவரும் திரும்ப எஸ்ஜ.,யின் கன்னத்தை பதம் பார்த்தார் .
இருவரும் அவ்விதம் பரஸ்பரம் அடித்துக் கொண்டதால் எஸ்ஐ., உடனே ஆலூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு விவரம் தெரிவித்தார். போலீசார் அங்கு கூடுவதைக் கண்ட பீரப்பா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.