பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருந்தாலும், தமிழக அரசியல் களம் சசிகலாவை மையப்படுத்தியே நகர்கிறது. 'ஆட்சி அதிகாரத்தைப் பின்வாசல் வழியாக இயக்குகிறார் தினகரன்' என்ற குற்றச்சாட்டுகளும் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. 'பொதுச் செயலாளராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டதற்கு தினகரன் அளித்த பதிலை, தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. தன்னுடைய விளக்கமாக சசிகலா எதை முன்வைத்தாலும், கிரிமினல் வழக்கு பாய்வதற்கு வாய்ப்புள்ளது' என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.
சென்னை, வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்பட்டதையே காரணமாகவைத்து, பதவியைத் தக்கவைக்கும் வேலைகளில் இறங்கினார் சசிகலா. தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறுவதற்குக் கடுமையாக முயற்சிசெய்தார் தம்பிதுரை. அவரது முயற்சிகள் எதுவும் பலிக்காததால், தன்னுடைய டெல்லி நண்பர்கள் மூலம் காய்களை நகர்த்திவந்தார், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். அ.தி.மு.க வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நாமக்கல் செந்திலோடு, டெல்லி சென்று சில விஷயங்களைச் சாதிக்கக் கிளம்பினார். அவரது முயற்சிக்கு டெல்லி வட்டாரத்தில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு விரிவான கடிதம் அனுப்பியிருந்தார் தினகரன். அந்தக் கடிதத்தில், 'கட்சி விதிகளின்படியே சசிகலா பொதுச் செயலாளர் ஆனார்' எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தேர்தல் ஆணையத்தின் செயலர் பிரமோத் குமார் சின்ஹா கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில்,
தினகரன்‘கடந்த பிப்ரவரி 2,15,17 ஆகிய தேதிகளில், உங்கள் பெயருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்களுக்கு டி.டி.வி. தினகரன் பெயரில் ஐந்து வெவ்வேறு கடிதங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளன. தேர்தல் ஆணையத்திடம் பதிவுசெய்யப்பட்டுள்ள கட்சி ஆவணத் தகவலின்படி, அ.தி.மு.க-வின் நிர்வாகியாக டி.டி.வி. தினகரன் இல்லை. தேர்தல் ஆணையத்துடன் மேற்கொள்ளப்படும் கடிதத்தில், கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிதான் கையெழுத்திட முடியும். எனவே, தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்துக்கு உங்கள் கையொப்பம் இட்ட பதிலையோ அல்லது உங்களால் அங்கீகரிக்கப்பட்ட யாராவது ஒருவர் சார்பிலோ பதில் அளிக்க வேண்டும். வரும் 10-ம் தேதிக்குள் பதில் அனுப்ப வேண்டும்' என அதிரடியாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது, முதல்வர் உள்பட எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் கலந்துரையாடுவது என டி.டி.வி.தினகரன் பரபரப்பாக இயங்கிவருகிறார். 'கட்சி ஆவணத்தின்படி, அவர் அ.தி.மு.கவின் நிர்வாகியாக இல்லை' எனத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் ஆளும்கட்சி நிர்வாகிகள்.
சசிகலா புஷ்பா"தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா புஷ்பா தொடக்கத்தில் கொடுத்த புகார்களின் அடிப்படையிலும், பன்னீர்செல்வம் அணியில் இருந்து மைத்ரேயன் எம்.பி அளித்த புகார் தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 'ஜெயலலிதா கையெழுத்தை வைத்து இவர்கள் முறைகேடு செய்வார்கள்' எனத் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தார், சசிகலா புஷ்பா. அதற்கான நேரம் இப்போது நெருங்கிவிட்டது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலின்போது, 'நான் மறுபிறவி எடுத்துவிட்டேன். அண்ணா தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்' என ஜெயலலிதா கையெழுத்துடன் அறிக்கை வெளியானது.
'அந்த நேரத்தில் கையெழுத்துப் போட்ட ஜெயலலிதாவால், மூன்று தொகுதி வேட்பாளர்கள் அளித்த பி படிவத்தில் ஏன் கைநாட்டு வைத்தார்?' என்பதுதான் புகாரின் சாராம்சம். இதைச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. 2012 மார்ச் மாதம் கட்சிக்குள் சேர்க்கப்பட்டார் சசிகலா. ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் கட்சியின் உறுப்பினராகிவிட்டார். ஆனால், உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா கடைசி வரையில் கொடுக்கவில்லை.
இதைப் பற்றி ஆணையத்தின் அதிகாரிகளிடம் வலியுறுத்திய சசிகலா புஷ்பா, 'கட்சிக்குள் அவர் சேர்க்கப்பட்ட பிறகு நடந்த செயற்குழுவுக்கு, ஜெயலலிதாவுக்கு உதவியாக கூட்டத்துக்கு வந்தார். செயற்குழு உறுப்பினர்களின் பெயரை நான்தான் தொகுத்து எழுதினேன். அதில், முதல் பெயரே என் பெயர்தான். அதில் எந்த இடத்திலும் சசிகலா பெயர் இடம்பெறவில்லை. அவர் எப்படி செயற்குழு உறுப்பினர் கிடையாதோ, அதேபோல கட்சியின் உறுப்பினரும் கிடையாது. தற்போது தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம்கொடுப்பதற்காக, உறுப்பினர் அட்டையை அவர் அனுப்பினால், அதைப் பரிசீலிக்க வேண்டும்.
அந்த அட்டையில் இருப்பது ஜெயலலிதா கையெழுத்துதானா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். உறுப்பினர் அட்டையில் மோசடி செய்திருந்தால், டெல்லி காவல்துறையில் புகார் அளித்து, கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அனைத்துக் குளறுபடிகளையும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்' என வலியுறுத்தி இருக்கிறார். மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா கொடுக்கும் பதிலைப் பொறுத்தே, எங்கள் அணியின் வேகம் அதிகரிக்கும்" என்கிறார், பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர்.
"துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் அந்த மனுவை அனுப்பினேன். பன்னீர்செல்வம் போன்றவர்கள் தினமும் எதையாவது கூறி, தங்கள் இருப்பைக் காண்பித்துக்கொள்ள முயற்சிசெய்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில், அவர்கள் முழுமையாக அடங்கிவிடுவார்கள்" என நேற்று கொந்தளித்தார் டி.டி.வி.தினகரன். 'தேர்தல் ஆணையத்தின் அதிரடியும், அப்போலோ மர்மத்துக்கு விடை தேடி நடத்தப்படும் தர்ம யுத்தமும், யாரை அடங்கவைக்கப்போகிறது என்று பாருங்கள்' எனப் புன்சிரிப்போடு பதிலளிக்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.