மதுரை:
மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குமரி மகா சபையின் செயலாளர் ஜெயக்குமார் தாமஸ் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘கல்விக்காக, தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் செலவு செய்ய வேண்டியதுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும். இதனால், ஜவஹர் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் திறக்க அனுமதிக்கப்பட வேண்டும். இந்தப் பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இவ்வகைப் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசு போதிய இடங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு, இந்தப் பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக தமிழக அரசின் பதிலைத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். முன்னதாக, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது குறித்த தமிழக அரசின் கருத்தை செப்டம்பர் 11 இன்றுக்குள் தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணையின்போது, கிரமப்புற மாணவர்களும் பயன்படும் விதத்தில், இந்தி, ஆங்கிலம், மாநில மொழி ஆகியவற்றில் 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலும், 11, 12 ஆம் வகுப்புகளில் தமிழ் விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் மூலம் உறுதி கூறப்பட்டது.
இதை அடுத்து, நீதிபதிகள் சசிகதரன், சுவாமிநாதன் அடங்கிய பெஞ்ச், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர வேண்டும். 8 வாரங்களுக்கும் தடையில்லாத சான்றிதழ் வழங்க வேண்டும். நவோதயா பள்ளிகள் அமைக்கத் தேவையான உள்கட்டமைப்புக்களை அமைத்துத் தர வேண்டும். பள்ளிகளை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.