சென்னை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்தால், அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என கும்மிடிப்பூண்டி வந்த மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்ப இலங்கை அகதிகள் முகாமை மத்திய உள்விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் முகாம் தலைவர் சிவகுமார் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், இலங்கை தமிழ்ப் பகுதியில் 13 வது சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். அகதி முகாம்களில் உள்ள உயர் கல்வி மாணவர் களுக்கு அரசு கல்வி கட்டணம் அளிக்க வேண்டும், கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். கடவுச் சீட்டு, விசா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. பிறகு, அகதிகள் மத்தியில் அமைச்சர் பேசும்போது, ‘தமிழக அரசு, அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவிகளை செய்து வருகிறது. முகாமில் எவ்வளவு காலம் அகதிகள் வசிக்க விரும்புகிறார்களோ, அவ்வளவு காலம் வரை, அவர்களுக்கு தேவையான கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். அகதிகளுக்கான பாஸ்போர்ட், விசா தொடர்பான அகதிகளின் கோரிக்கைகள் குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்தால், அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும். ஐ.நா.சபையில் அகதிகள் தொடர்பான எந்த ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடவில்லை. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தப்படுகிறது. மேலும், அகதிகளுக்கான கொள்கை குறித்து தேவைப்பட்டால் விவாதித்து அரசு முடிவெடுக்கும் என்றார்.
தமிழக அரசு பரிந்துரைத்தால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்குமாம்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari