நண்பன் இறந்த சோகத்தில், பள்ளி மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.சின்ன காஞ்சிபுரம், திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் பூபதி மகன் குருசடகோபன், 17. காமாட்சி காலனி பகுதி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில், அவரது நண்பர்களுடன், பள்ளிக்குச் சென்றார். மதியம், வீட்டுக்கு வந்த அவர், கதவை உட்புறம் தாழிட்டு கொண்டார். சிறிதுநேரம் கழித்து, குடும்பத்தினர் சென்றபோது, கதவு சாத்தப்பட்டிருந்தது.
கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, குருசடகோபன் துாக்கில் தொங்கிய நிலையில், இறந்து காணப்பட்டார். தகவலறிந்த விஷ்ணு காஞ்சி போலீசார், சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ரவிகிரண் என்பவர், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்பதால், நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
ரவிகிரணும், குருசடகோபனும், நெருங்கிய நண்பர்கள் என்பதும், ரவிகிரண் இறந்ததால், அதிர்ச்சியில் இருந்த குருசடகோபனும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.