thol_thirumavalavan சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள் வேலைத் திட்டமாக விரிவுபடுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- காங்கிரஸ் ஆட்சியின்போது நடைமுறையிலிருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புற உழைக்கும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆண்டில் 100 நாள்களுக்கு வேலை வழங்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தாலும், அது ஒரு பயனுள்ள திட்டமாகவே விளங்கியது. தற்போது பாஜக ஆட்சியில் அந்தத் திட்டத்தைப் படிப்படியாக முடக்கும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. இதனால், இத்திட்டத்தின்கீழ் வேலை நடக்கும் பரப்பளவும் வெகுவாகக் குறைந்துள்ளது. தமிழகத்திலுள்ள 385 ஒன்றியங்களிலும் நடைபெற்ற இவ்வேலைகள் சுமார் 94 ஒன்றியங்களில் மட்டுமே நடைபெறுவதாகத் தெரிகிறது. இது எளிய மக்களுக்கெதிரான மாபெரும் மோசடியாகும். இந்தத் திட்டத்தை முடக்கும் முயற்சியைக் கைவிட்டு, 200 நாள் வேலைத் திட்டமாக விரிவுபடுத்த வேண்டும். ஊதியத்தை நாளொன்றுக்கு 200 ரூபாயாக உயர்த்த வேண்டும். இதை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 16 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending