தமிழகத்தில் ஏர்செல் செல்போன் டவர்கள் ​ஒரு சில நாட்களில் ​சீர் செய்யப்படும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சமையல் கியாஸ் முன்பதிவு, ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு, மின்னணு பண பரிமாற்றம் போன்ற முக்கிய தேவைகளுக்கு செல்போன் அவசியம் என்ற காலகட்டத்தில் ‘ஏர்செல்’ சேவை பாதிப்பால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை 4வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏர்செல் சேவையில் இருந்து மற்ற செல்போன் நிறுவனங்களில் சேவையை பெறுவதில் வாடிக்கையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சில வாடிக்கையாளர்கள் சேவை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து ‘ஏர்செல்’ நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் கூறியதாவது:- செல்போன் சேவை நிறுவனத்தில் கடும் போட்டி இருப்பதால், ஏர்செல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது.எல்லா செல்போன் சேவை நிறுவனங்களை போன்று ஏர்செல் நிறுவனமும் டவர்களை இன்னொரு கம்பெனியில் இருந்து குத்தகைக்கு எடுத்து தான் சேவையை வழங்கி வருகிறது.

எங்களுக்கும், டவர் கம்பெனிக்கும் இடையே நிலுவை தொகை பாக்கி இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீதம் டவர்களை அந்த கம்பெனி வலுக்கட்டயமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணைத்துள்ளது. அதன்படி 9 ஆயிரம் டவர்களில் 8 ஆயிரம் டவர்கள் இயங்கவில்லை. இது எங்களுக்கும், இன்னொரு கம்பெனிக்கும் உள்ள நிதி மற்றும் சட்ட பிரச்சினை என்றாலும், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அளவுக்கு சென்றிருப்பது வருத்தம் அளிக்கிறது.
‘ஏர்செல்’ நிறுவனத்துக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. ​ஒரு சில நாட்களில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு டவர்கள் எல்லாம் இயங்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

ஒரு வேளை சமரச பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்தால், மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுடன் கைக்கோர்த்து அந்த நிறுவனங்களின் சேவையை வாடிக்கையாளர்களுக்கு பெற்று தருவதற்கு முயற்சியில் ஏர்செல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending