சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.
அரசியல் அறிவிக்குப்பின் ரஜினி பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : தாம் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியவர்களில் ஏ.சி சண்முகம் ஒருவர். மேலும் தான் வந்து எம்.ஜி.ஆர்.சிலையைத் திறக்க வேண்டும் என்று பிடிவாதமாக ஏ.சி சண்முகம் இருந்தார். எம்.ஜி.ஆர். திரை உலகத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அரசியல் பேச வேண்டி உள்ளது. தற்போது எம்.ஜி.ஆரின் அதிமுக ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது.
தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு நிறைய பேருக்கு தெரியாது. தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு குறித்து நிறைய பேச ஆவலாக உள்ளேன். அரசியவாதிகள் தங்களது வேலையை சரியாக செய்யவில்லை. கலைஞர், மூப்பனார் போன்றவர்களுடன் பழகி தான் அரசியல் கற்றுக்கொண்டேன். தன்னை யாரும் ரத்தினக் கம்பளம் விரித்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பவில்லை. தன்னை ஏன் ஏளனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் நல்ல தலைவருக்கும், தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது.
அரசியல் பாதை கல்லும், முள்ளும் மற்றும் பாம்புகளும் நிறைந்தது என்று தமக்கு தெரியும். எம்.ஜி.ஆர் ஒரு யுக புருஷர் அவரைப் போல யாரும் உருவாக முடியாது. எம்.ஜி.ஆர்.தந்த நல்லாட்சியை தம்மால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் ஆசிர்வாதத்தால் நல்ல சிந்தனையாளர் உதவியுடன் நல்லாட்சி தர முடியும். தமது பக்கம் ஆண்டவனே இருப்பதாக நடிகர் ரஜினி தெரிவித்தார்.