நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா கடந்த மாதம் 18–ந் தேதி தற்கொலை செய்த கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதிகாரிகள் கொடுத்த தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தையும், ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டுமான ரவி , அவரது தோழியும் கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி, வழக்கறிஞர் மாளவியா, என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் தீரன் சின்னமலை இயக்க தலைவர் யுவராஜ் ஆகியோர் கூறி இருந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே கோகுல்ராஜின் தாயார் சித்ரா , சகோதரர் கலைச்செல்வன் , விஷ்ணுபிரியாவின் நண்பரும், மதுரை உயர் நீதிமன்றம் வழக்கறிஞருமான மாளவியா, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவில் குருக்களும், விஷ்ணுபிரியாவின் இன்னொரு நண்பருமான விஜயராகவன் மற்றம் விஷ்ணுபிரியாவின் தாயார் கலைச்செல்வி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று அவரது தோழியும், கீழக்கரை டி.எஸ்.பியுமான மகேஸ்வரியிடம் 9 மணி நேரம் விசாரணை நடந்தது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

நேற்று பகல் 11–45 மணிக்கு அவர் சேலம் சுப்பிரமணிய நகர் சன்னதி தெருவில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பிக்கள் நாகஜோதி, அன்பு , டி.எஸ்.பி ராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இடையில் 15 நிமிடம் சாப்பாட்டு வேளை தவிர மற்ற நேரங்களில் விசாரணை நடந்தது. அவரிடம் நூற்றுக்கனக்கான கேள்விகளை போலீசார் கேட்டு பதில்களை பெற்றனர்.

விஷ்ணுபிரியாவுடன் ஏற்பட்ட நட்பு, அவருடன் செல்போனில் அடிக்கடி பேசிய போது பகிர்ந்து கொண்ட தகவல்கள், வழக்கறிஞர் மாளவியா, கோவில் குருக்கள் ஆகியோருடன் அடிக்கடி பேசிய விவகாரங்கள் உள்ளிட்ட பல கேள்விகளை மகேஸ்வரியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கேட்டு பதில் பெற்றனர். எந்த அடிப்படையில் அதிகாரிகள் தொல்லை கொடுத்ததால் விஷ்ணுபிரியா தற்கொலை செய்ததாக கூறினீர்கள் என்பது உள்ளிட்ட கேள்விகளும் இடம் பெற்றன. அனைத்திற்கும் மகேஸ்வரி பொறுமையாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை முடிந்து இரவு 9 மணிக்கு வெளியே வந்த மகேஸ்வரியிடம் செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக உங்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் எந்த மாதிரியான கேள்விகளை கேட்டனர்? அதற்கு நீங்கள் கூறிய பதில்கள் என்ன? என்ன அடிப்படையில் விஷ்ணுபிரியாவுக்கு உயர் அதிகாரிகள் தொல்லை கொடுத்ததாக கூறினீர்கள்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இது குறித்து உங்களிடம் சி.பிசி.ஐ.டி. அதிகாரிகள் கேள்வி கேட்டு பதில் பெற்றார்களா? உங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தார்களா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு மகேஸ்வரி சிரித்து கொண்டே பதில் அளித்தார். அவர் தெரிவித்ததாவது:–

என்னிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி வெளியே எதுவும் கூற முடியாது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர் என மகேஸ்வரி கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending