இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு ஐ.எஸ்.எல். போட்டி நிச்சயம் உதவும்: நீட்டா அம்பானி

Published:

 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் என்று ஐ.எஸ்.எல். சேர்மன் நீட்டா அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி குறித்து அதன் சேர்மனும், தொழில் அதிபருமான நீட்டா அம்பானி நேற்று ஒரு பத்திரிக்கை செய்தியாளருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

நான் மட்டுமின்றி நமது வீரர்கள், பயிற்சியாளர்கள், கிளப் உரிமையாளர்கள், முக்கியமாக ரசிகர்கள் அனைவரும் இந்த சீசனுக்கான ஐ.எஸ்.எல். போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். உலக தரம் வாய்ந்த கால்பந்து ஆட்டம் மீண்டும் தொடங்க உள்ளது. இந்த சீசனில் நடைபெறும் அனைத்து ஆட்டங்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். தேசிய வீரர்கள், 23 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மற்றும் சிறந்த சர்வதேச வீரர்கள் சம கலவையில் ஒவ்வொரு அணியிலும் இடம் பிடித்து இருக்கிறார்கள். இந்த சீசனுக்கான போட்டி பெரிய அளவிலும், சிறந்ததாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கால்பந்து ஆட்டத்தை நமது நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் ஐ.எஸ்.எல். போட்டி தொடங்கப்பட்டது. 120 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவை கால்பந்தை விரும்பும் நாடாக மாற்ற விரும்புகிறோம். கடந்த ஆண்டில் சென்னையின் எப்.சி. அணிக்கு தமிழக மக்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளித்தார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம். மெட்ராசி, மென்டோசா ஆகிய வீரர்களின் பேனர்களை ஏந்தியபடி மைதானத்துக்கு ரசிகர்கள் வந்து இருந்ததுடன், அணிக்கு ஆதரவாக உற்சாக குரல் எழுப்பி ஊக்கமளித்தனர். ஐ.எஸ்.எல். போட்டிக்கு தமிழக ரசிகர்கள் கடந்த சீசனில் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சீசனின் தொடக்க விழாவை சென்னையில் நடத்த முடிவு செய்தோம்.

இந்தியாவை சேர்ந்த சர்வதேச வீரர்களான சுனில் சேத்ரி, ராபின் சிங், தோய், இஜென்சன், ஜாகிசந்த் உள்ளிட்டோர் இந்த சீசனில் பல்வேறு அணிகளில் இடம் பிடித்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய நட்சத்திர வீரர்களான இவர்கள் சர்வதேச வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இணைந்து செயல்பட கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள். இந்த சீசன் போட்டி இந்திய வீரர்களின் திறமையை வெளிக்கொண்டுவர உதவும் என்று நம்புகிறேன்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

கார்லோஸ், ஜிகோ உள்ளிட்ட மூத்த ஜாம்பவான் வீரர்கள் இந்த போட்டியில் விளையாடுவதை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். அவர்கள் இந்த போட்டியில் பங்கேற்பது ரசிகர்களை ஈர்ப்பதுடன் மட்டுமல்லாமல், சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களுடன் விளையாட நமது வீரர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகும்.

இந்திய கால்பந்து அணியின் செயல்பாட்டில் முன்னேற்றம் காண்பதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். ஐ.எஸ்.எல். போட்டியின் மூலம் இந்திய கால்பந்தில் ஏற்றம் ஏற்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இளம் கால்பந்து சாம்பியன்களை உருவாக்க ரிலையன்ஸ் பவுண்டேசன் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஒரே நாள் இரவில் வெற்றி கிடைத்து விடாது. வெற்றியை எட்ட பொறுமை காக்க வேண்டியது அவசியம். கடந்த உலக கோப்பையை வென்ற ஜெர்மனி அணி, இந்த வெற்றிக்காக 10 ஆண்டுகளுக்கு மேல் உழைக்க வேண்டியது இருந்தது என்பதை அறிவோம். நமது வீரர்களும் சிறப்பான முயற்சியை மேற்கொண்டால் அதற்கான பலன் நிச்சயம் ஒருநாள் கிடைக்கும் என்று நம்புகிறேன் என நீட்டா அம்பானி பத்திரிக்கை செய்தியாளரிடம் கூறினார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img