சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டி, உக்ரைன் நாட்டின் தலைகரான கீவில் நடைபெற்றது. ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கான இந்த போட்டியில், ரியல் மாட்ரிட் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லிவர்பூல் அணியின் முகமது சாலா இருவரின் ஆட்டம் அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சம நிலையில் இருந்தன.
இதனையடுத்து 2-வது பாதியின் ரியல் மாட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் பென்சிமா போட்டியின் 51-வது நிமிடத்தில் கோல் அடிக்க ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக லிவர்பூல் அணியின் மனே 55-வது நிமிடத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் 1-1 என சம நிலையில் இருந்தன. பின்னர் சுதாரித்து ஆடிய ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் தொடர்ந்தது ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக அந்த அணியின் பாலே 64 மற்றும் 83 நிமிடங்களில் கோல் அடித்து அசத்தியதால் ரியல் மாட்ரிட் அணி ஆட்ட நேர முடிவில் 3-1 என லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.