இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் புகழும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிதான், நாங்கள் விளையாடும் போட்டிகளுக்கு நேரில் வந்து ஆதரவு தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் நடைப்பெற்ற தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டியை குறைவான ரசிகர்களே நேரில் கண்டுகளித்தனர். வெறிச்சோடி காணப்பட்ட மைதானத்தில் இந்திய அணி, தனது வெற்றியை பதிவு செய்தது.
சமீபத்தில் இந்தியாவில் நடைப்பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பு இருந்தது. 8 அணிகள் மோதிய இந்தத்தொடரில் லீக் போட்டிகளில் இருந்து இறுதிப்போட்டி வரை நடைப்பெற்ற அனைத்து போட்டிகளையும் ரசிகர்கள் நேரில் வந்து கண்டுகளித்தனர். அரங்கமே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் சில போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. காவிரிக்காக தமிழகத்தில் நடைப்பெற்ற போராட்டத்தின் காரணமாக இந்தப்போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. சென்னை ரசிகர்கள் ரயில் ஏறி புனே சென்று தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.