முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்டுள்ள இரு ஊழல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசில் கடந்த 2004-2009-ம் ஆண்டுக்கு இடையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரின் மகனான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அவரது பதவிக்காலத்தின்போது இந்தூர், லக்னோவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அவர் முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடத்தி அன்புமணி ராமதாஸ் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என அன்புமணி தாக்கல் செய்த மனுவை கடந்த மாதம் 20-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தவறு செய்திருப்பதற்கான அடிப்படை முகாந்திரம் கிடைத்திருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

இதையடுத்து, மேற்கண்ட இரு வழக்குகளிலும் தன்மீது குற்றம்சுமத்தி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றதில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

சுஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்குர் மற்றும் கோபால கவுடா அடங்கிய அமர்வின்முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில்தான் அவர் இதற்கு நிவாரணம் பெற வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், அன்புமணி ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending