சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

நெதர்லாந்தின் பிரெடா நகரில் நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.

இந்திய அணி சார்பில் வீரர்கள் ராமன் தீப் சிங், தில்ப்ரீத் சிங், மன்தீப் சிங், லலித் உபாத்யாயே ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

நெதர்லாந்தின் பிரெடா நகரில் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில், உலகின் சிறந்த ஆறு அணிகளான அர்ஜென்டீனா, உலகின் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

இன்று நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இரு அணிகளும் பரம வைரிகள் என்பதால், போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் கால்பகுதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதியில் இருபெனால்டி கார்னர்கள் இந்திய அணிக்குக் கிடைத்தும் அதில் கோலாக்கத் தவறியது.

2-வது கால் பகுதியில் 25-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ராமன் தீப் சிங் கோல் அடித்து அணியை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார்.

அதன்பின் 2-வது பகுதிநேர ஆட்டம் தொடங்கியது, இதில் முதலாவது கால்பகுதியில் இரு அணிகளும் போடவில்லை. இருப்பினும் 1-0 என்று கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து சாதகமான நிலையில் இருந்தது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் பந்தைகடத்திக் கொடுத்தார், ஆனால் எளிதான வாய்ப்பை தவறவிட்ட அந்த அணி வீரர் அஜாஸ் அகமது அதைக் கோலாக்காமல் கோட்டைவிட்டார். அதுமட்டுமல்லாமல் கிடைத்த முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பையும் பாகிஸ்தான் அணி தவறவிட்டது.

ஆனால், 2-வது கால்பகுதியின் கடைசி 15 நிமிடங்களில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி கோல் மழை பொழிந்தனர். 54-வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்பிரீத் சிங் 2-வது கோல் அடித்தார்.

அடுத்த 3 நிமிடங்களில் 57-வது நிமிடத்தில் மன்தீப் சிங் 3-வது கோலையும், 59-வது நிமிடத்தில் லலித் உபாத்யாயே கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், இறுதிவரை பாகிஸ்தான் அணி இறுதிவரை கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, 4-0 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.