நெல்லை கோர்ட் உத்தரவை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் எஸ்.வி சேகர்

போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பெரிய அளவில் பிரச்சனை ஆனது. இந்த பிரச்சனையில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை பேஸ்புக்கில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்

இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார். முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார். ஆனால் உச்ச நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது. ஆனால் தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. அவர் சந்தோசமாக போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் சுற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் மீது தமிழகம் முழுக்க போடப்பட்ட வழக்குகளில், நெல்லையிலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் ஆஜராகும்படி சேகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எஸ்.வி.சேகர் இன்று ஆஜராக வேண்டும் என்று திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.