மதுரையைப் பற்றி யாரும் சொல்லாத கதை

 

 

(இந்தக் கட்டுரை 2011-ல் எழுத்தாளர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ படைப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றபோது அவரை பேட்டிக் கண்டு எழுதியது. இனி கட்டுரை..)

அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் போல்தான் இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் சாகித்ய அகாடமி விருது என்ற கருத்து படைப்பாளிகள் மத்தியில் எப்போதும் இருக்கிறது. அது ஓரளவு உண்மையும்கூட.. இளம் வயதில் இந்த விருது பெற பாக்கியம் செய்திருக்க வேண்டும். அந்த பாக்கியம் ஜெயகாந்தனுக்கு இருந்தது. அதற்கடுத்து சு.வெங்கடேசனுக்கு வாய்த்திருக்கிறது. 1973-ல் ஜெயகாந்தன் சாகித்ய அகாடமி விருது பெறும்போது அவருக்கு வயது 38. 2011-ல் வெங்கடேசனுக்கு வயது 41.

 
சு.வெங்கடேசன்
எப்போதும் ஒரு சரித்திர நாவல் என்பது குறிப்பிட்ட எல்லைக்குள்ளே நின்றுவிடும். பெரும்பாலான படைப்புகள் ஒரு தனி மனிதனின் வீரத்தையோ, அல்லது அரச குடும்பத்தை மையமாக வைத்தோ படைக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், உயிர்ப்போடு இருக்கும் ஒரு நகரை நாவலாக படைத்திருப்பது ஆச்சரியப்படுத்தும் புதுமை. வரவேற்பும் எதிர்மறை விமர்சனங்களும் பெரும் சூறாவளியாய் சுழன்றுக் கொண்டிருக்க.. குளிர் வாட்டியெடுக்கும் மழைக்கால மாலைப் பொழுதில் சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசனை சந்தித்தேன். இந்த சரித்திர படைப்புக்காக தான் பட்டபாடுகளை பகிர்ந்து கொண்டார். இனி அவரது வார்த்தைகளில்..
 
“இந்த நாவலை நான் எழுத தொடங்கியபோது என் மகள் கைக்குழந்தை. எழுதி முடித்து வெளியே வந்தபோது அவள் என் தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கிறாள். பத்து வருடங்கள் போனது தெரியவில்லை. ஒரு நாவலுக்காக 10 வருடங்கள் உழைத்திருப்பது அதிகமாக தெரிந்தாலும், அந்த உழைப்பு மனநிறைவை தந்திருக்கிறது. அதற்கு பரிசாக சாகித்ய அகாடமி விருது கிடைந்த்தது என் வாழ்நாள் சாதனை. 
 
மதுரை 2,500 வருடங்கள் பழமையான நகரம். உலகில் வேறு எங்கும் இவ்வளவு பழமையான நகரம் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு நகரங்கள்கூட அழிக்கப்பட்டு, மீண்டும் சிறிது தொலைவு தள்ளி வேறு இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும், அல்லது புதிதாக உருவாகியிருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே இடத்தில் அழிவின்றி இருக்கும் நகரம் இந்த உலகில் மதுரை மட்டுமே! 
 
நகரம் மட்டுமல்ல, அதன் இடங்கள்கூட மாறவில்லை. தத்தனேரியில் எரியும் நெருப்பு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு யாரோ ஒரு தமிழன் சிதையை பற்றவைத்த நெருப்பு. உலகில் வேறெங்கும் இத்தனை பழமையான சுடுகாட்டை அதே இடத்தில் இருப்பதை பார்க்கமுடியாது. 
 
வரலாற்றின் மூத்த குடிகளின் மண் இது. தமிழ் நாகரிகம் தழைத்தது இங்குதான். தமிழ் பண்பாட்டை மதுரை வரலாறு வழியாகப் பார்த்தால்தான் அதன் மேன்மை தெரியும். அதனால்தான் மதுரையை மையப்படுத்தி எழுதவேண்டும் என்று நினைத்தேன். 
 
அதற்காக 1997-ல் முதல் ஆய்வுக்கட்ட பணிகளை மேற்கொண்டேன். அதை நாவலாக எழுதுவதா? ஆய்வுக்கட்டுரைபோல் எழுதுவதா? இல்லை வரலாற்று தொகுப்பாக கொண்டுவருவதா? என்ற குழப்பம் இருந்தது. மூன்று வருடமாக எந்த முடிவுக்கும் வராமல் வெறும் ஆய்வுத் தரவுகளை மட்டும் தேடித் தேடி சேகரித்தேன். அப்போதுதான் நாவலுக்கான கருத்து அதில் இருப்பது தெரிந்தது. நாவலாக எழுதுவது என்ற முடிவை எடுத்தேன். 
 
மதுரை, சென்னை, லண்டன் ஆவணக் காப்பகங்களில் இருந்தும், பக்தி இலக்கியம், ஓலைச்சுவடிகள், தாமிர பட்டயங்கள், இஸ்லாமியர்களின் குறிப்புகள், கிறிஸ்துவ பாதிரியார்களின் டயரி குறிப்புகள் என்று அனைத்தில் இருந்தும் தகவல்களை சேகரித்தேன். வரலாறு என்பதே எழுதப்படாத தகவல்களில்தான் அதிகம் இருக்கிறது. அதனால் அதையும் தேடி அலைந்தேன். 
 
கிராமங்களில் சொல்லப்படும் கதைகள், வெறும் கதைகள் மட்டுமல்ல, அது வரலாற்றின் தொடர்ச்சி தொடர்ந்து வாய்வழியாக வந்த சரித்திரம். இதற்காக மதுரை மாவட்டத்தில் இருந்த எல்லா பழைய கிராமங்களிலும் தங்கியிருந்து கதை கேட்டேன். அவற்றை இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறேன். ‘காவல் கோட்டம்’ எழுதப்படாத வரலாறு நிறைந்த ஒன்று. யாரும் சொல்லாத கதைகள்.

நான் சந்திக்க நினைத்த, சந்தித்த பல மனிதர்கள் வயோதிகத்தின் காரணமாக சில வாரங்களுக்கு முன்பும், பின்பும் இறந்தபடியே இருந்தனர். இரண்டாவது முறை அவரிடம் பேட்டியெடுக்க போகும்போது வெள்ளை அடிக்கப்பட்ட வீட்டுச் சுவரோ, பிரிக்கப்படாமல் இருக்கும் வாசல் கொட்டகையோ தூரத்தில் இருந்தே அந்த துக்க செய்தியை சொல்லும்.

போகும் இடமெல்லாம் மரணம் சகப் பயணியாக கூடவே வந்து கொண்டிருந்தது. ‘ஒரு வாரம் முன்னால் வந்திருக்கக் கூடாதா..? இதெல்லாம் தெரிந்த மனுஷன் இப்பதானே செத்தாரு..!’ என்ற குரல் கேட்காத கிராமமே இல்லை. ஏதாவது ஒரு தகவல் கிடைக்காதா என்று பொழுதெல்லாம் அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பிய நாட்கள் நிறைய.

அதுகூட பரவாயில்லை. இப்போது கிராமத்தில் கதையை தேடினால் கிடைக்காது. கிராமத்து சாவடிகளை டி.வி. தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 10 வருடங்களுக்கு மேலாகிறது.

தாயக்கட்டங்களைப் போல் சாவடி பட்டியக்கல்லின் மேல் விரிந்துக் கிடந்த கதைகள், இப்போது தூண்களின் இடுக்குகளில் ஒளிய தொடங்கியிருக்கிறது. இப்படி எழுதப்படாத பல கதைகளை இந்த நாவலில் சொல்லியிருக்கிறேன்.

மதுரை; இந்த நகரம் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. துயரை தாங்கியிருக்கிறது. மிகப் பெரிய மனிதர்களை இடம் தெரியாமல் பந்தாடியிருக்கிறது. ஆனாலும் உயிர்ப்போடு இருக்கிறது.

இதுவரை ஒரு நகரை மையப்படுத்தி எந்த நாவலும் இல்லை. இதன் கதை மதுரை நகரைச் சுற்றி காட்டப்படும் கோட்டையில் இருந்து தொடங்குகிறது. கி.பி.1310-ல் அந்தக் கோட்டை கட்டப்படுகிறது. அப்போது மீனாட்சியம்மன் கோயில் ஒற்றைக் கோபுரத்துடன் உயர்ந்து நிற்கிறது. அப்போது நாவல் தொடங்குகிறது.

நாவல் வளர வளர மீனாட்சியம்மன் கோயிலும் வளர்கிறது. மதுரையின் காவல் கோட்டமாக இருக்கும் இந்தக் கோட்டை தனக்குள் நடக்கும் நிகழ்வுகளையும், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. 1920-ல் மீனாட்சியம்மன் கோயில் நான்கு ராஜகோபுரங்களுடன் உயர்ந்து நிற்கிறது. கோட்டை இடிக்கப்படுகிறது.

கோட்டையின் அழிவை மட்டும் 40 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். மிகத்துயரமான நிகழ்வு அது. பொதுவாக கோட்டைகள் எல்லாமே வெளியில் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும்தான் தாக்குதல்களை சந்தித்திருக்கும், ஆனால் மதுரைக் கோட்டை மட்டும் உள்ளுக்குள் இருந்து தன் சொந்த மக்களால் இடிக்கப்படுகிறது.

முதலில் ஒருவர் இருவராக வரத் தொடங்கியவர்கள், கடைசியில் அன்று மதுரை நகரில் வாழ்ந்த 42 ஆயிரம் மக்களும் சேர்ந்து எதிரிகளிடம் இருந்து தங்களை இவ்வளவு காலம் காத்து நின்ற கோட்டையை இடித்து தரைமட்டமாக்குகிரார்கள். அந்த சோகத்தோடு நாவல் நிறைவு பெறுகிறது.

கோட்டையின் எச்சம்

முல்லைப் பெரியாறு அணையைப் பற்றி விரிவாக பேசும் ஆய்வு நாவல் இதுதான். தென்னிந்தியாவை கொடூரமாகத் தாக்கிய தாது வருடப் பஞ்சம் மதுரையை மிக உக்கிரமாக தாக்கியது. அந்த பஞ்சத்தில்தான் மொத்த மக்கள்தொகையில் பாதி காணாமல் போனது. இதன்பின்தான் ஆங்கிலேய அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுகிறது.

இந்த நாவலில் 250 சிறுகதைகள் உள்ளன. அதில் 10 பக்கம் கொண்ட ஒரு சிறுகதைதான் ‘அரவான்’ திரைப்படம்.

அரவான்

சாகித்ய அகாடமி விருது படைப்பிலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. அது சரியான நேரத்தில் சரியான படைப்புக்கு கிடைத்திருக்கிறது. இந்த விருது மேலும் என்னை எழுத தூண்டுகிறது.” என்று தனது நீண்ட உரையை முடித்தார் வெங்கடேசன்.

காவல் கோட்டத்தை நாவல் என்று சொல்வதைவிட வரலாற்று ஆவணம் என்று சொல்லலாம். ஒன்றிரண்டு சம்பவங்களைத்தவிர அத்தனையும் உண்மையான பெயரில் நடந்த செய்திகளை மட்டுமே சொல்கிறது. மதுரையை பற்றிய 600 ஆண்டுக்கால வரலாற்றை முழுமையாக சொல்லும் ஆவணம் இது.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.