சென்னை: திருமலை திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக, சென்னையில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று காலை தொடங்கியது.
வலிமையான பாரதம், வளமான தமிழகம் என்ற பிரார்த்தனையுடன், ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் பிரமாண்ட திருவிழாவாக இது நடத்தப் படுகிறது.
காலை தொடங்கிய ஊர்வலம், இன்று மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. தினமலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில் வருடந்தோறும் நடைபெறுகிறது இந்த திருக்குடை ஊர்வலம்.
இதற்காக, இன்று காலை சென்னை பாரிமுனை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, திருப்பதி குடை ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் வழக்கமாகச் செல்லும் பாதையான என்.எஸ்.சி. போஸ் சாலை கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு (சென்ன கேசவ பெருமாள் கோயில்) பைராகி மடம் வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து சுமார் 4 மணி அளவில் யானைக் கவுனி தாண்டுகிறது.
அதன் பின்னர் நடராஜா தியேட்டர், சென்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலை அடைகிறது.
அங்கிருந்து நாளை அதிகாலை புறப்படும் குடை ஊர்வலம், ஐசிஎப், பெரம்பூர், வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட் வழியாக, ஆவடி, பட்டாபிராம், மணவாளன் நகர், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் வழியாக திருப்பதியைச் சென்றடைகிறது.
பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் திருப்பதி குடை வரும் வீதிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. திருக்குடை ஊர்வலம் வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.