மழை சேதங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தை அரசு உணர வேண்டும்: ராமதாஸ்

சென்னை:
மழை சேதங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட கண்டனத்தை அரசு உணர வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் மழைநீர் வடிகால் வசதிகள் மிக மோசமாக பராமரிக்கப்படுவது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,‘‘சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காத அரசுக்கும், ஏரி&குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது’’என கூறியிருக்கிறது. இதை கருத்து என்று கூறுவதை விட தமிழக அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்த கண்டனம் என்று கூறுவது தான் பொருத்தமானதாக இருக்கும்.

சென்னையில் பெய்த மழை அசாதாரணமானது இல்லை என்றாலும், அதனால் ஏற்பட்ட விளைவுகள் அசாதாரணமானவை என்பது அனைவரும் அறிந்த உண்மை. சென்னையில் ஏரி, குளங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்த போதிலும் கடந்த 50 ஆண்டு கால தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகளில் அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது, மழை நீரை கடலுக்கு கொண்டு செல்லும் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாதது, மழை நீர் வடிகால்கள் சீரமைக்கப்படாமல் கழிவுநீர் குழாய்களில் மழைநீர் சேர்ந்து ஓட அனுமதிக்கப்பட்டது ஆகியவை தான் சென்னையில் மழை பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வும் அதே கருத்தைத் தான் தெரிவித்திருக்கிறது.

அதேநேரத்தில் சென்னையில் ஏரி&குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை பாடம் புகட்டியிருப்பதாக உயர்நீதிமன்றம் கூறியிருப்பதில் முழு உண்மை இல்லை. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வீடுகளை கட்டி குடியிருப்பது பொதுமக்கள் தான் என்ற போதிலும், ஏரிகளை தூர்த்து வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்தது தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான். இந்த உண்மை உயர்நீதிமன்றத்திற்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்… ஆனால், பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆகும். சென்னை போன்ற நகரங்களில் சொந்த வீடு என்பது அனைவருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும் நிலையில், அந்தக் கனவை தமிழக ஆட்சியாளர்கள் நிறைவேற்றித் தந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய ஆட்சியாளர்கள் தவறிவிட்ட நிலையில், அவர்களின் ஆசியுடன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏரி மற்றும் குளங்களை மடக்கிப் போட்டு, மனைகளாக்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் போது எப்படியாவது சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்ற கனவில் இருந்த நடுத்தர மக்கள் அந்த மனைகளை வாங்கி வீடுகள் கட்டி குடியேறியதை தெரிந்தே செய்த தவறாக கருத முடியாது.

அதேநேரத்தில் தமிழக அரசு தெரிந்தே இந்த தவறை செய்து வருகிறது. சென்னை மாநகரமே மழையில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் அம்பத்தூரில் குறைந்த வருவாய் பிரிவினருக்கான அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவித்திருக்கிறது. மொத்தம் 11.5 ஏக்கரில் 2394 வீடுகளை கட்டுவதற்கான அந்த நிலம் ஏற்கனவே ஏரியாக இருந்த இடம் ஆகும். சென்னை முகப்பேர், வேளச்சேரி ஆகிய இடங்களில் பல வீட்டு வசதித் திட்டங்கள் ஏரிகளில் தான் அரசால் செயல்படுத்தப்பட்டன. ஏரி நிலங்களில் வீடுகளை கட்டுவதற்கான பல தனியார் திட்டங்களுக்கு சதுர அடி கணக்கில் கையூட்டு பெற்றுக் கொண்டு அனுமதி கொடுத்தது தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு கட்சிகளின் அரசுகள் தான். அதனால், அடைமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவிக்க வேண்டியதும், மழையிலிருந்து பாடம் கற்க வேண்டியதும் அவர்கள் தானே தவிர அப்பாவி மக்களல்ல.

சென்னை மாநகரில் எங்கெல்லாம் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்; மழை நீர் வடிகால்களுக்கான எல்லைக் கோட்டு வரைபடங்களைத் தயாரித்து அதன்படி வடிகால்களை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதை இதுவரை செய்த தவறுகள், விதிமீறல்கள், ஊழல்கள் உள்ளிட்ட பாவங்களை போக்க கிடைத்த வாய்ப்பாக கருத வேண்டும். அதுமட்டுமின்றி, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அவற்றை அகற்றவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.