வெள்ள நிவாரண நிதியாக ரூ.8,481 கோடி வழங்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

 
 
தமிழகத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.8,481 கோடி வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதாஎழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ள தாவது :-
 
தமிழகத்தில் நவம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், சேதமடைந்த கட்டமைப்புகளை சீர் செய்யவும், மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிதியுதவி அளிக்க வேண்டும்.
 
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களும், தமிழகத்தின் பல மாவட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டன.தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, அமைச்சர்களும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும், ராணுவம், விமானப் படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் மீட்புப் பணிகளுக்காக மேற்கண்ட படை வீரர்களை உடனடியாக அனுப்பி
உதவியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சுமார் 4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. நெய்வேலியில் கடந்த 9ம் தேதி 437 மி.மீ. மழை பதிவானது. அதே போல, சென்னையிலும், நவம்பர் 20ம் தேதிக்குள்ளாக, கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத அளவுக்கு மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவ மழைக்கு தமிழகத்தில் 169 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள், பாலங்கள், நீர் நிலைகள், மின்சாரம் வழங்கும் மின் கட்டமைப்புகள் என மாநிலத்தின் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.எனவே, தமிழகத்துக்கு நிவாரண உதவியாக உடனடியாக ரூ.500 கோடியை ஒதுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
இதில்லாமல், தமிழகத்தில் பழுதான உள்பட்டமைப்புகளை சரி செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் ரூ.8,481 கோடி தேவைப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அரசு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.