தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்தி, மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வருகிறோம்; மற்றவர்களைப் போலவே அரசியல் செய்வதற்கு நாம் ஏன் புதிதாக அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினி காந்த் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம், நீக்கம் அனைத்தும் எனது கவனத்திற்கு வருவதில்லை என்று கூறுவது தவறானது என்றும், ஒழுங்கு நடவடிக்கைகள் எனது ஒப்புதலுடனே மேற்கொள்ளப் படுகிறது என்றும் அவர் அந்த அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தன் அனுமதியில்லாமல் நடந்ததாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் மன்ற உறுப்பினர்கள் நியமனம், மாற்றம், ஒழுங்குநடவடிக்கைகள் அனைத்தும் தன் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு, தன் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன.
அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி, பணம் சம்பாதிக்க எண்ணுபவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன், இப்போதே விலகி விடுங்கள் என கடந்த ஆண்டு மே மாதம் ரசிகர்கள் சந்திப்பில் கூறினேன். நான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை, தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன்.
ரஜினி மன்றத்திற்காக செலவு செய்ய வேண்டும் என்று தான் யாரையும் சொன்னது கிடையாது. மன்றத்தினருக்கு தான் கொடுத்த வேலை பணம் செலவு செய்து முடிக்க வேண்டிய வேலை கிடையாது! எனவே யாராவது என்னிடம் வந்து மன்றத்திற்காக பணம் செலவு செய்தேன் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள முடியாது! 30, 40 வருடங்கள் ரசிகர்கள் மன்றத்தில் இருந்தது மட்டுமே, மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுதகுதி ஆகி விட முடியாது.
பொதுமக்களுடன் மன்ற நிர்வாகப் பொறுப்புகளை பகிர்ந்து செயல்படாமல், கொடுத்த வேலையை தானும் செய்யாமல், துடிப்புடன் செயல்பட விரும்பும் உறுப்பினர்களை செயல்பட விடாமலும் தடுத்து, மன்றத்தின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டவர்களைத்தான் மன்றத்திலிருந்து நீக்கியிருக்கிறோம் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.