15 வருட இடைவெளிக்குப் பின் வெற்றிப் படமான சாமி இரண்டாம் பாகமாக தயாராகியுள்ளது. இதில் முக்கிய அம்சம், முதல் படத்தில் ரவுண்டு கட்டிய திரிஷா, நடிக்க மறுத்து நடையைக் கட்டியதால், ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி ஆடியிருப்பதுதான்!
விக்ரம்-திரிஷா நடித்து 2003-இல் வெளியான ‘சாமி’, அன்றைய சூப்பர் ஹிட் மூவி. ஹரி இயக்கத்தில் இதன் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. சாமி – 2 படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தமான காட்சிகளும் பாடல் காட்சியும் படமாகி வருகிறது.
இந்தப் படம் குறித்து இயக்குனர் ஹரி கூறியபோது,“சாமி படம் முதல் பாகத்தின் இறுதி காட்சியில் “சாமி வேட்டை தொடரும்” என்று முடித்திருந்தோம். அந்த வேட்டை இரண்டாம் பாகத்தில் தொடர்கிறது” என்றார்.
இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷை தேர்வு செய்தனர். திரிஷாவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தனர்.
ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதும் திரிஷா திடீரென்று விலகினார். தன் கதாபாத்திரம் வலுவில்லாமல் உள்ளதாகக் கூறி அதில் நடிக்க மறுத்து விலகினார். இதனை அடுத்து திரிஷா மீது சாமி-2 படத்தை தயாரிக்கும் சிபு தமீம், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
சமரச முயற்சிகளை திரிஷா ஏற்கவில்லை. அட்வான்ஸ் பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டார். இதனால் படக்குழுவினர் திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்தனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த வாய்ப்பு குறித்துக் கூறியபோது, “திரிஷா மறுத்ததால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மணிரத்னம், வெற்றிமாறன், கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து விட்டேன். ஹரி திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்துவார். அவர் இயக்கத்தில் விக்ரமுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்” என்றார்.
தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்று சாமி ஆடினார் திரிஷா. அதே கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக இப்போது சாமியாடி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.