spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்சன் டிவி.,யால் நேர்ந்த சங்கடம்! எக்குத்தப்பாய் முடிந்த எதிரும் புதிரும்!

சன் டிவி.,யால் நேர்ந்த சங்கடம்! எக்குத்தப்பாய் முடிந்த எதிரும் புதிரும்!

- Advertisement -

எதிரும் புதிரும்… உண்மையாக எதிரும் புதிருமாக இருப்பவர்கள் யார் என்றால், சமூக வலைத்தளங்களில் உணர்ச்சி வசப்பட்டு அடுத்தவரைத் திட்டித் தீர்த்து நுனிப் புல் மேய்பவர்களும், சமூக ஊடகங்களில் இயங்காமல் ஆழ்ந்த அறிவுத் தேட்டத்தில் ஈடுபடுபவர்களும்தான்! தேடி வரச் செய்பவர்களுக்கும், தேடிச் செல்பவர்களுக்கும் வேறுபாடு இருப்பது போல்.!

விவகாரம் இதுதான்..! சன் டிவி வழக்கம் போல் தன் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் பங்கு பெற, வைணவப் பெரியவர்களான எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன், கருணாகராச்சாரியார் என இருவரை அழைத்தது. நிகழ்ச்சியின் தலைப்பு, எது உயர்ந்தது? வடகலையா? தென்கலையா?

இந்தத் தலைப்பில் விவாதிக்க இரு பெரியவர்களும் உகந்தவர்கள்தான் என்றாலும், விவாதிக்கத் தகுந்த மேடை இதுவல்ல என்பது பலரது கருத்தாக சமூக வலைத்தளங்களில் ஒலித்தது. பலர் சன் டிவி.,க்கு போன் செய்தார்கள். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது சாதி ரீதியான, ஹிந்து மதத்தில் குழப்பம் விளைவிக்கும் தாக்குதல் எனக் கருதினார்கள். இதை அடுத்து பேஸ்புக்கில் பலவிதமான மோசமான வசைச் சொற்கள் உலவின. இதனிடையே இந்த நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் ஒளிபரப்பாமல் நிறுத்திவைத்தது சன் டிவி.,

பேஸ்புக்கில் சில கருத்துகளைப் பார்த்து வந்தேன். சன் டிவி – எதிரும் புதிரும் விவாதத்தில் கலந்து கொள்ள வந்திருந்த இரு பெரியவர்களைக் குறித்தான மோசமான வசையாடல்கள்… மிகவும் துக்க கரமானது. துயரகரமானது. நம் சமூகம் வெட்கப் பட வேண்டியது, வெட்கித் தலை குனிய வேண்டியது.

இந்த விவகாரத்தில் இருவருக்கு இட்ட பின்னூட்டங்களை மட்டும் நானிங்கே பதிவு செய்கிறேன். பேஸ்புக்கில் நேரத்தை செலவிட நான் விரும்புவதில்லை. இது ஒரு மாய உலகம். வீணர்கள் நிறைந்த புதர்க்காடு. சொல்வதை முழுதாகப் படித்து ஜீரணிக்கக் கூட நேரமற்ற, படித்துப் புரிந்து கொண்டு நல்லுணவு உட்கொள்ளக் கூட மனம் அற்ற, வெறுமனே வெற்றிலை பாக்கு லாஹிரி வஸ்துக்களை மென்று துப்பி சூழலை நாசமாக்கிக் கொண்டிருப்பவர்களே நிறைந்த குப்பை உலகம்!

பதில் 1: நம் பழக்க வழக்கங்கள் தேர்ந்த அறிஞர்கள் மூலம் பொதுமக்களிடம் பரவலாக்கப் பட வேண்டும். அதற்கு இத்தகைய நிகழ்ச்சிகள் அவசியம்!

எங்குதான் பேதம் இல்லை.. எத்தனை நாட்கள் கோயில் புளியோதரையை நம் மடியிலேயே கட்டிக் கொண்டு நாம் மட்டுமே மறைத்து மறைத்து உண்ண முடியும். அது நாலு பேருக்கு கொடுக்கப் பட்டால்தான், ஊசிப் போகாமல் தூர எறிந்துவிடும் நிலைக்கு வராமல் இருக்கும். பகவத் ப்ரசாதம் அதை பயபக்தியுடன் வாங்குபவன் ஆகா பெருமாள் நிவேதித்துக் கொடுத்தது ஏன்ன சுவை என சிலாகிப்பான்… புளியோதரைச் சுவைக்காக உண்பவன் அதில் புளி தூக்கல் என விமர்சிப்பான். ஒருவன் காரம் என்பான். ஒருவன் உப்பில்லை என்பான். அதற்காக, புளியோதரையை விநியோகிக்கவே கூடாதென்றால்…?!

பதில் 2:
விவாதம் தேவையற்றது என்று கருதினால் தேவையற்றதுதான்…
ஆனால், பங்குகொண்ட இருவருமே… பழுத்த அறிஞர்கள். திண்ணைப் பேச்சு வீரர்களைப் போல் கேவலமாக சண்டையிடும் நபர்களில்லை. இருவருமே தத்துவார்த்த ரீதியாக கருத்துகளை முன்வைக்கக் கூடியவர்கள்.

எனக்கு தெரிந்து… இருவருமே நல்ல விதமாக, அவரவர் சம்ப்ரதாய உயர்வையே பேசியிருப்பார்கள். ப்ரொமோவில் காட்டியபடி, காஞ்சிச் சண்டை சில நொடிகளில் வெறுமனே கரைந்து போயிருக்கும்…

இந்த நிகழ்ச்சி, சாதாரண சமூக வலைத்தள எதிர்ப்பினால் நிறுத்தப் பட்டிருக்காது…
இந்த நிகழ்ச்சியின் மூலம், எங்கே வைணவக் கருத்துகள் பாமர மக்களையும் போய்ச் சேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக ஏதாவது ஒரு ப்ரஷரில் நிறுத்தப் பட்டிருக்கும்.

சன் டிவி ரேட்டிங்குக்கு தக்க விஷயம் இந்த விவாதத்தில் அவர்களுக்குக் கிடைத்திருக்காது… காரணம், இந்த விவாதத்துக்கு வரவழைக்கப்பட்ட அறிஞர்கள்..! அவர்களிடம் மடப்பள்ளி பரிஜாரகர் ரேஞ்சுக்கு நீங்கள் சண்டையை எதிர்பார்த்து என்ன தான் மூட்டி விட்டாலும் அவர்களிடம் இருந்து அத்தகைய பதில்கள் கிடைத்திருக்காது..

இப்படி என் கருத்தைத் தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன், ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கை:

பொதுவாக நான் Face Book பார்ப்பதில்லை. ஆனால் சில முக்கியமான தகவல்களுக்காக Whatsup பார்ப்பதுண்டு. அதில் சிலர் சன் டிவியில் நானும் ஸ்ரீ கருணாகராசாரியரும் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சினைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை எழுதியுள்ளதைப் பார்த்தேன். Face Bookலும் இதுபற்றிய காட்டமான விமரிசனங்கள் எழுதப்பட்டுள்ளதாக என்னிடம் சொன்னார்கள். எனவே இது பற்றி என்னுடைய விளக்கத்தைத் தெரிவிக்கிறேன்.

ஊடகங்களில் நடைபெறும் பல விவாத நிகழ்ச்சிகளுக்கு என்னை பல தொலைக்காட்சிகளிலும் அழைத்திருக்கிறார்கள். அவற்றில் நான் ஏற்றுக் கொண்டவற்றைவிட நிராகரித்தவைதான் அதிகமாக இருக்கும். அவசியம் நம்முடைய கருத்தை ஆணித்தரமாகத் தெரிவித்தாக வேண்டும் என்ற நிலை இருந்தால்தான் இந்த விவாதங்களில் கலந்து கொள்வேன். ஆண்டாள் பற்றி வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து, அர்ச்சகர்கள் நியமனம் பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை குறித்து விவாதங்கள் நடைபெற்றபோது என்னுடைய கருத்தை ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தேன். அது குறித்துப் பலர் என்னைப் பாராட்டியிருக்கின்றனர்.

சமீபத்தில் சன் டிவியிலிருந்து ஒருவர் என்னிடம் தொடர்பு கொண்டு வைணவத்தில் வடகலை தென்கலைப் பிரிவுகள் பற்றி ஒரு விவாத நிகழ்ச்சிக்கு வரமுடியுமா என்று என்னைக் கேட்டார்கள். எதற்கு வீண் சர்ச்சை என்று முதலில் யோசித்துச் சொல்வதாகத்தான் கூறினேன். ஆனால் அந்த நபர், இந்தப் பிரிவுகள் எப்போது ஏன் ஏற்பட்டன என்பது பற்றித்தான் பேச வேண்டும்;; வடகலை பற்றிப் பேசுவதற்கும் உங்ளுக்குத் தெரிந்தவரையே அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று கூறினார். சரி என்று நானும் இசைந்தேன்.

சமீபகாலமாக வைணவத்தின் உட்பிரிவுகளுக்குள் இருக்கும் சர்ச்சைகள் செய்தித்தாள்களிலும் பரபரப்பாக வந்து வைணவத்திற்கு அவப்பெயரை உண்டாக்கி இருந்தன. எனவே எனவே இந்த சன் டிவி விவாதத்தின்மூலம் இந்த உட்பிரிவுகளின் சர்ச்சைகள் மிகவும் சாதாரணமானவை; இவை அண்ணன் தம்பிகளின் சண்டை போன்றவை;; இவற்றை ஊடகங்கள்தான் பெரிது படுத்துகின்றன என்பதைக் கூறுவதற்குக் கிடைத்த வாய்ப்பு என்றே எண்ணினேன். இதுபற்றி ஸ்ரீ உ.வே. கருணாகராசாரியர் ஸ்வாமியிடமும் தெரிவித்தேன். அவரும் என்னுடைய கருத்தை ஒப்புக்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்தார்.

நிகழ்ச்சியை நடத்துபவர் கேட்ட கேள்விகளும் அதற்கு நாங்கள் அளித்த பதில்களும் எந்த விதத்திலும் சண்டையை உண்டாக்குபவை அல்ல. பொதுவாகத் தென்கலை வடகலை என்றால் என்ன? சர்ச்சைகள் ஏன் உண்டாகின்றன? காஞ்சீபுரம் நம்மாழ்வார் சாற்றுமறையன்று ஏற்பட்ட சர்ச்சை என்ன என்பது பற்றித்தான் கேள்விகள் எழுப்பப்பட்டன. இவற்றிற்கு இருவருமே சாதாரணமான முறையில் அதாவது (சண்டையாக இல்லாமல்) தான் பேசினோம். முடிவில் இந்தச் சர்ச்சைகள் எல்லாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. இவை அண்ணன் தம்பி சண்டைபோலத்தான். இவற்றை ஊடகங்கள்தான் பரபரப்புக்காகப் பெரிது படுத்த நினைக்கின்றன. மற்ற மதங்களின் உட்பிரிவுகளுக்குள் இருக்கின்ற விரோதம் ஒருவரை ஒருவர் வெடிவைத்துக் கொல்லுமளவிற்குச் செல்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் விவாதம் செய்யாத ஊடகங்கள் வைணவத்தின் உட்பிரிவு பற்றி விவாதம் நடத்தி பெரிது படுத்த வேண்டாம் என்று கூறித்தான் விவாதத்தை முடித்தோம்.

ஆனால் அந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தில் நாங்கள் இருவரும் சண்டை போடுவதுபோல பரபரப்பிற்காக வெளியிட்டபடியினால்தான் இவ்வளவு கண்டனங்கள் எழுந்துள்ளன. உண்மையில் அந்த நிகழ்ச்சியை நேரடியாக முழுவதும் ஒளிபரப்பியிருந்தால் அனைவருமே பாராட்டித்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். விளம்பரத்தைப் பார்த்து விட்டு நிகழ்ச்சியைப் பார்க்காமலே அவரவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். இதில் சில பேர்கள் எங்கள் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக சந்தடி சாக்கில் ஆபாசமான வசவுகளையும் பொழிந்துள்ளார்கள் என்று கேள்விப்பட்டேன். இதிலிருந்தே அத்தகைய ஆபாசமான கண்டனங்கள் நியாயமற்றவை என்பது உறுதியாகிறது.

இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டிருக்கவே வேண்டாம் என்று பலர் கருதுவதும் எங்களுக்குப் புரிகிறது. பலருடைய மனத்தைப் புண்படுத்தும்படியாக உள்ள இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று சன்டிவியையே கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. நல்ல எண்ணத்தில் நான் செய்வதாக நினைத்த செயல் இப்படி ஆகும் என்று நான் நினைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதற்கு என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற விஷயங்களில் இன்னமும் கவனமாகச் செயல்படவேண்டும் என்றும் அறிந்து கொண்டேன். இந்த விஷயத்தில் நியாயமான முறையில் தவறுகளைச் சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

– எம்.ஏ. வேங்கடக்ருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,892FollowersFollow
17,300SubscribersSubscribe