அரும்புலியூரில் ஓர் அரும் உத்ஸவம்

ஒவ்வொரு கிராமத்துக்கும் வழிபாட்டுக்கென சிவன் கோயிலோ பெருமாள், அம்மன் கோயில்களோ... அல்லது கிராமத்து முப்பிடாதி, சுடலை மாடன் வகையறா கோயில்களோ என.. இருந்து...

ஊர் சுற்றல் … அரும்புலியூருக்கு!

ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி அறிமுகமாகி பின்னர் Fakebook.. பேக்புக், வாட்ஸப்புகளில் தொடர் தொடர்பில் இருக்கும் பொய்கைஅடியான் பார்த்தசாரதி ஸ்வாமி, தமது கிராமமான அரும்புலியூரில் உள்ள பெருமாள் கோயிலில் ஞாயிறு இன்று காலை பெருமாளுக்கு கல்யாண உத்ஸவம் செய்வதாகவும், தமது ஊருக்கு அவசியம் வருமாறும் அழைத்தார்.

பெங்களூரில் இருக்கும் நம் நட்பு வட்டத்தில் மேற்படி ஸ்வாமியும் ஒருவர். சரி.. இன்று நன்னேரம் போக்குவோமே என்று வழக்கம்போல் கிளம்பிவிட்டேன்.

காஞ்சிபுரத்து கிராமங்களின் அழகை, அதுவும் பாலாற்றுப் படுகை வயல்வெளிகளையும் பச்சை மண்ணையும் ரசித்துப் பார்க்க கொடுத்துவைத்திருக்க வேண்டும். தண்ணீர் வறண்டு வெறும் மணல் ஆறாய்ப் பாலாறு திகழ்ந்திடுனும், இறைவனின் மிச்ச சொச்ச கருணை இருப்பதால் அங்கங்கே பசுமை தலை காட்டுகிறது. பொத்தேரியில் இருந்து கிளம்பி செங்கல்பட்டு பைபாஸ் வழியே காஞ்சிபுரம் சாலையில் திரும்பி சற்று தொலைவில் இடப்புறம் திரும்பி பாலாற்றுப் பாலத்தின் வழியே பிரதம மந்திரி கிராம மேம்பாட்டுச் சாலைத் திட்டத்தில் போடப்பட்ட அழகான ஒற்றைச் சாலையில் பயணித்தேன். காவித்தண்டலம்.. பெயர் நன்றாகத்தான் இருந்தது. சாலையை ஒட்டி தலைகாட்டிய சிவன் கோவில் சுவரும் கோபுரம், வெள்ளைச் சுண்ணாம்புப் பசை கண்டு மாமாங்கம் ஆகியிருக்கும்போல். இன்னும் ஓரிரண்டு சிறு சிறு கோயில்கள்…

இன்றே இப்படியான தன்மையைக் கொண்டிருக்கும் பாலாற்றின் கரையைப் பார்த்தபடி பயணிக்கும் போது… பாண்டியனுக்கும் சோழனுக்கும் சவால் விட்ட பல்லவன் தன் நாட்டை எப்படி வைத்திருந்திருப்பான் என்பதை எண்ணிப் பார்த்தபோது மெய்யாலுமே மெய் சிலிர்த்தது. பாலாற்றை மட்டும் பல்லவன் திசை திருப்பி செழிப்பாக்கவில்லை, அங்கங்கே ஏரிகளை அமைத்து வழி நெடுக நீரைத் தேக்கி வைத்திருந்தான். ஏரிகளின் மாவட்டம் என்று இன்று நாம் பீற்றிக் கொள்ளும் பெருமையை, பிளாட்டுகளாக்கி வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறோம்… அது வேறு கதை!

கூகுள் மேப் புண்ணியத்தில் அரும்புலியூர் செல்லும் சாலை மனத்தில் பதிந்து விட்டது என்றாலும், பயணத்தினூடே கிராம மக்களிடம் எதை முன்னிட்டு உரையாடுவது? வழி கேட்பதில்தானே! தென்பட்ட ஓரிரு பெரியவர்களிடம் ஐயா… அரும்புலியூர் போற ரோடு இதானேன்னு உறுதிப் படுத்திக் கொண்டு, அவர்களின் காஞ்சி பிரதேச தொண்டை மண்டல பேச்சு மொழியை ரசித்தவாறே பயணித்தேன்.

அரும்புலியூர்… அழகிய கிராமம்தான்! சுற்றிலும் பசுமை வண்ணம் மட்டுமே தெரிந்த வயல்வெளிகள். நடுவே கோயில். பொய்கையடியான் புன்னகைத்தவாறே… வாரும் வாரும் என்று வரவேற்றார். முதல்முறை நேரில் பார்க்கிறார் என்றாலும் என் முகம் பளிச்சென்று தெரிந்திருக்கிறது மனிதருக்கு! (இதுக்குதான் அப்ப அப்ப நாம வேலை பாக்கற பத்திரிகைகள்லயே போட்டோக்களெல்லாம் போட்டு… எடுபிடிகள் மூலம் பேனர் வைத்து, ஐயா வர்றார் ஐயா வர்றார்ன்னு முன்னேற்பாடெல்லாம் செய்து, மூஞ்ச பிரபலப் படுத்திக்கணும்ங்கிறதுன்னு திபிக., தானைத் தலைவர் மானசீகமா வந்து ஓரமா காதுல கிசுகிசுத்தார்… இல்லயா பின்னே! அப்பத்தானே அங்க இங்க நிகழ்ச்சி நடத்துறவங்க.. எங்க ப்ரோக்ராமுக்கும் வாங்க வாங்கன்னு குமிப்பாங்க… இன்விஷ்டேஷனா! 🙂 )

பெருமாள் மாலைகளை மூங்கில் தட்டில் சுருட்டி எடுத்து முதுகில் சுமந்து கொண்டு, ஆடியாடி அகம் தணிந்து, இசை பாடிப்பாடி இசைவாய்ச் சுருண்டு, தரை தொட்டு, முழந்தாளிட்டு நடந்து ஆடி … கொஞ்சம் எண்டர்டெய்ன்மெண்ட் கொடுத்தார் ஒரு பெரியவர்… ருசிகரமாகத்தான் இருந்தது.

மாலை மாற்றல் முடிந்து வந்தவரிடம்

ஸ்வாமி.. அடியேன். உம் திருநாமம்.. என விசாரித்தேன்.

குப்புஸ்வாமி என்றார்.

தப்பா நெனச்சிக்கப்டாது.. உம் வயஸ்ஸு என்னவோ? – கேட்டேன். 78 என்றார்.

ஊர்…? வினவினேன். பொன்விளைந்தகளத்தூர் என்றார்… தொடர்ந்து ஒவ்வொரு சன்னிதியாகச் சொல்லி, அங்கெல்லாம் போய் இந்தக் கைங்கர்யத்தைச் செய்வதை கண்களில் அவ்வளவு ஆர்வம் பொங்கக் கூறினார். கேட்டு பிரமிப்பாக இருந்தது. (ஃபோட்டோவில் இருப்பவர்…)

தொடர்ந்து வழக்கமான சடங்குகள்… மாங்கல்யதாரணம், வாரணமாயிரம், சாத்துமுறை என்று நிறைந்தது.

கிராமத்து மக்கள் அதிகம் தலைகட்டினர். கிராமத்துச் சிறுவர்கள், தூக்கிக் கட்டிய பாவாடை சட்டை, டிராயர் சட்டை என கபடற்ற சிறுவர் சிறுமியர்… வாரிப் பின்னலிட்டும், தலை சொறிந்து ஒழுங்கற்ற தலைமுடியும் என அப்பழுக்கற்ற நம் கிராமக் குழந்தைகளின் முகம் காணும் போது … நன்றாய்த்தான் இருக்கிறது.

ஆலய மண்டபத்தில் இடப்புறம் வேத பாராயணத்தில் சிலர் என்றால்… வலப்புறம் இருக்கும் பிராகார சிறு இடத்தில் பாண்டி ஆடிய சிறுமிகள்… ஒரு பயல் பக்கத்திலேயே பம்பரம் விட்டான்.

மலர் மாலைகள் சூடி தெம்பாக இருந்தார் பெருமாள். பாவம் அவர் தோள் கனக்கிறது என்று பரிவு காட்டி, கைங்கர்ய ஸ்வாமி பெருமாள் மாலைகளைக் கழற்றி வந்திருந்தவர்களுக்குப் போட்டு… சிலவற்றை சிறிதாக்கி ஊர்ப் பெரியவர்களை அழைத்து எல்லோருக்கும் மாலைகளை கழுத்திலிட்டு.. (ஒவ்வொருவர் முகத்திலும்தான் என்ன பெருமிதம்…!) பெருமாளை வெறும் முத்துக் கொண்டை சகித கவசபூஷிதனாக்கிவிட்டார்!

கோஷ்டி முடிந்து வரிசையாக ததியாராதனை…

கொஞ்சம் கூட கரைச்சலோ சத்தமோ குழப்பமோ இன்றி.. சிறார்களில் இருந்து ஊர்ப் பெரியவர்கள் வரை எல்லோரும் வரிசையாக அமர்ந்து…சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் தயிர்சாதத்தை உண்டு…

அந்த ஒழுங்கைப் பார்க்கும்போது பல வித எண்ணங்கள் மனத்தில்!

ஆனால்… ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெள்ளத் தெளிவாக இந்த சமூகத்துக்குச் சொல்ல விழைகிறேன்..

நம் முன்னோர்களின் சமூகக் கட்டமைப்பு …

ஒவ்வொரு கிராமத்துக்கும் வழிபாட்டுக்கென சிவன் கோயிலோ பெருமாள், அம்மன் கோயில்களோ… அல்லது கிராமத்து முப்பிடாதி, சுடலை மாடன் வகையறா கோயில்களோ என.. இருந்து…

கிராமத்தின் நன்மைக்காக, ஊர் சுபிட்சமுடன் திகழ, விவசாயம் செழிப்பாக இருக்க, மழை நன்றாகப் பொழிய, ஆற்றில் நீர் வர, நோய் நொடியற்று கிராமத்தினர் நலமுடன் திகழ… என்று சங்கல்பித்து இறை வழிபாட்டுடன் அந்த எண்ணத்தை மக்கள் மனத்தில் நன்றாக ஊன்ற வைத்து எல்லாம் சரியாக இருந்தவரை… கிராமங்களில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அவ்வப்போது வரும் வறட்சி, பஞ்சத்துக்கும் வழிபாட்டைச் சொல்லி ஒரு கூட்டம் தன்னை முழுதுமாய் ஈடுபடுத்தியது. இப்போது எல்லாமே வெளியேற்றம்…

பயனை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!