ஒப்படைப்பு

காலைக் கண்விழிப்பு
உன் கனவுகளுடனே!

என் தலையணையில் ஏறியது
உன் கூந்தலின் வாசம்!

காப்பியின் சுவை
நாக்கில் சுடும்போது…
உன் வார்த்தைக் கசப்பு
நெஞ்சைச் சுடுகிறது!

வாசலில் விழுந்த செய்தித்தாளின்
நாசியைத் துளைக்கும் வாசனை…

கண்கள் தேடும்
அன்றைய ராசிபலனை!
எனக்கு ராசியாகிப் போன
உன் ராசியின் பலனை
உடனே மேயும்!

நல்லதாய் இருந்தால்
என் மனம் துள்ளும்!
எதிர்மறை என்றால்..
எப்படி சமாளிப்பாய் என
சஞ்சலம் கொள்ளும்!

என்னைப் பற்றி என்ன கவலை?
என்னை உன்னிடம்
ஒப்படைத்த பின்னே!