தொடரும் தாக்குதல்கள்; காவல்துறையும் அரசும் என்ன செய்கிறது?: ராம.கோபாலன் கேள்வி

 

சென்னை:

இந்து அமைப்பினர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,  அரசும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

வேலூரில் துவங்கிய தாக்குதல் திண்டுக்கல், கோவை, திருப்பூர், சென்னை என நீண்டு கொண்டே போகிறது. நேற்று சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் நரஹரி தாக்கப்பட்டுள்ளார்.  இவை எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்பது சம்பவங்களிலிருந்து ஒரு சிறுவனால் கூட யூகித்துவிட முடியும். இதனை செய்பவர்கள் யார் என்பது உலகமே அறிந்த விஷயம்தான்.

மதவாதம் என கூக்குரலிடுபவர்கள் இது பற்றி வாய் திறப்பதில்லை, காரணம் இவர்கள் ஓட்டு வங்கி அரசியலில் நம்பிக்கைக் கொண்டவர்கள். கொன்றவன் இஸ்லாமியனாக இருந்து செத்தவன் இந்துவாக இருந்தால் வாய் திறக்க மாட்டார்கள். இந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட இவர்களுக்கு ஓட்டுத்தான் முக்கியம் என நினைக்கும் கேவலமான அரசியல்வாதிகள். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

வேலூரில் அரவிந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டபோது, காவல்துறை போலி குற்றவாளிகளை கொண்டு வராமல், உண்மையான குற்றவாளிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகளை பிடித்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்பதை காவல்துறை இப்போதாவது உணர வேண்டும். காவல்துறை, தனது தவறை திருத்திக்கொள்ள முனைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நீதித்துறையும் உண்மையான குற்றவாளிகளுக்கு எத்தகைய தண்டனையை வழங்குகிறதோ, அதேபோல உண்மையை திசைத்திருப்ப தானே வந்து சரணடையும் குற்றவாளிகளுக்கு அதே தண்டனையை வழங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் உண்மை குற்றவாளிகளைவிட அதிக தண்டனை வழங்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் கருத்தாக இருக்க முடியும்.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காவல்துறை இன்னமும் அதிக கவனமுடன் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட கடுமையாக பணியாற்றியிருக்க வேண்டும். முதல்வர் குணமாகி வரவேண்டும் என நாமும் நினைக்கிறோம், பிரார்த்திக்கிறோம். முதல்வர் உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல்துறை நடந்துகொள்வது துரதிருஷ்டவசமானது.

ஆகவே, இப்படி தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுவது முதல்வர் கவனத்திற்கு செல்ல தற்போது வாய்பில்லை என்பதால் தமிழக அமைச்சர்கள் இதனைத் தடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும். இல்லையேல் மத்திய அரசு தலையிட்டு குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தை குறிவைக்கிறது பாகிஸ்தான் எனவும், மும்பையை போல கடற்கரை வழியாக தாக்குதல் நடத்தவும், அதற்கு தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் துணைபோகலாம் எனவும் வந்த செய்தியினை தமிழக உளவுத் துறையும் தமிழக மக்களும் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்.

தொடர்ந்து இதுபோல தாக்குதல் நடைபெற்றால் மக்கள் கலவரத்தில் ஈடுபடலாம், இதனை தங்களுக்கு சாதகமாக கொண்டு தமிழகம் முழுவதும் கொலைவெறி தாக்குதல் நடத்தவும் முஸ்லீம் பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருக்கலாம். இதனாலேயே முஸ்லீம்கள் கணிசமாக வாழும் பகுதிகளில் உள்ள இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறிவைக்கிறார்கள் என கருதுகிறோம்.

கோவையைப் போல மக்கள் வெகுண்டெழுந்தால் அப்போது பங்களாதேஷ் ஊடுருவக்காரர்களைக் கொண்டு கடைகளை உடைப்பது, பொருட்களை கொள்ளையடிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்து, அதனை சமூக ஊடகங்கள் மூலமும், அவர்களுக்குத் துணைபோகிற அமைப்புகளை, கட்சிகளை கொண்டு பிரச்சாரம் செய்து பயங்கரவாதத்தை திசைத்திருப்பவும் செய்யலாம்.

நடுநிலையாளர்கள் தமிழகத்திற்கு வந்துள்ள ஆபத்தை உணர வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், இங்கு ஆட்சி ஒன்று இருக்கிறதா என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும். மக்கள் பொறுமை இழந்தால் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதை அரசு உணர வேண்டும்.

இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் தள்ளி வைக்க உத்திரவிட்டுள்ளது. தேர்தல் பரபரப்பு தற்போதைக்கு இல்லை என்ற நிலையில் தமிழக காவல்துறை இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறித்த முறையான விசாரணையை செய்வதோடு, தொடர்ந்து ரோந்து சுற்றி சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்து விசாரணை நடத்தி பயங்கரவாத செயல்களை செய்யும் தேசவிரோத குற்றவாளிகளை பிடித்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.