பிரபல பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் (90) உடல் நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடுப்பி லட்சுமி நாராயணன் செவ்வாய்க்கிழமை இறந்தார். லட்சுமி நாராயணனுக்கு லீலாவதி என்ற மனைவியும், 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கர்நாடக மாநிலம், உடுப்பி பகுதியை பூர்வீகமாககக் கொண்ட லட்சுமி நாராயணன், காஞ்சிபுரம் எல்லப்ப முதலியாரை குருவாகக் கொண்டு பரத நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றார். 1962-ஆம் ஆண்டு சென்னை வடபழனியில் “நாட்டிய மஞ்சரி’ என்ற நடனப் பள்ளியைத் தொடங்கி ஏராளமான பரத நாட்டியக் கலைஞர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார் லட்சுமி நாராயணன். இந்த நடனப் பள்ளி இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேடை நாடகங்களுக்கு நடனம் அமைத்து வந்த லட்சுமி நாராயணன் நடிகர் சிவாஜி கணேசனின் நாடக மன்றத்தில் நடனக் கலை ஆசிரியராகப் பணியாற்றினார். “சுமதி என் சுந்தரி’, “சரஸ்வதி சபதம்’, “உழைக்கும் கரங்கள்’, “மீனாட்சி திருவிளையாடல்’, “காதலன்’, “சங்கமம்’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். மேலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நடன இயக்குநர்கள் ராஜு சுந்தரம், பிரபுதேவா, நடனக் கலைஞர்கள் ஜெயந்தி ராமானுஜம், திவ்யா கஸ்தூரி ஆகியோருக்கு பரத நாட்டிய கலை ஆசிரியராக திகழ்ந்த அவர், 2003-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமனி விருதையும், கர்நாடக அரசின் கலாஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். விருகம்பாக்கம் மயானத்தில் புதன்கிழமை (மார்ச் 18) காலை 8 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் மறைவு
Popular Categories