திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் பலி
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து இன்று (செப். 22) காலை சொகுசு கார் ஒன்று கோவை விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரில் ஓட்டுநர் உட்பட 6 பேர் பயணித்தனர். அவர்கள் பயணித்த கார் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, அதே மேம்பாலத்தில் எதிர் திசையில் ஈரோட்டிலிருந்து கோவை நோக்கி பேருந்து ஒன்று வந்தது. எதிர்பாராத விதமாக காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பஸ் மோதிய வேகத்தில் கார் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.
இந்த விபத்தில் டிரைவரைத் தவிர காரில் பயணித்த 5 பேரும் பலியாகினர். இந்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் அவினாசி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர்.
அவர்கள் காருக்குள் இறந்து கிடந்த 5 பேரின் உடல்களை அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் காயம் அடைந்த கார் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில், நாமக்கல் பள்ளிப்பாளையம் அதிமுக ஒன்றியச் செயலாளரும் திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவருமான கந்தசாமி (50),
திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஜேம்ஸ் (55), திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்க இயக்குநர் கதிர்வேல் (38), ரத்தினம் (48) உட்பட 5 பேர் பலியாகினர்.
இவர்கள் அனைவரும் டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் பலியானவர்களில் சிலர் தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர்கள் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
செய்தி… கே.சி.சாமி