சென்னை: ம.நடராஜன் மீண்டும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப் பட்டார்.
இதனிடையே அவரது உடல் நலம் குறித்து நேற்று பரவிய தகவல்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், மதிமுக., பொதுச் செயலர் வைகோ, திடீரென நேற்று இரவு மருத்துவமனையில் நடராஜனை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றார். ஆனால், மருத்துவர்கள் அவர் உறக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், நீண்ட நாள் நண்பர் என்பதால் காண வந்ததாகவும், ஆனால் அவர் தூக்கத்தில் இருந்ததாகவும் கூறினார்.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வெளியே வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனைப் பார்க்க சசிகலா சிறை விடுப்பு கேட்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் திங்கள் கிழமை நாளை பரோல் தாக்கல் செய்ய உள்ளார் என்று கூறப் படுகிறது. ஏற்கெனவே கடந்த அக்டோபரில், உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த தனது கணவரைப் பார்க்க சசிகலா பரோலில் வெளியே வந்து ஆறு நாட்கள் சென்னையில் இருந்தார். அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் அப்போது சிறை நிர்வாகம் பரோல் அளித்தது குறிப்பிடத் தக்கது.