புதிய பார்வை ஆசிரியர் நடராஜனின் உருவப் படம் திறப்பதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன. சிலை வைக்க வேண்டும் என்று தொடங்கி, அது படத்திறப்பில் தற்காலிகமாக நின்றுள்ளது. இந்த நிகழ்வில் சசிகலா என்ன செய்யப் போகிறார் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, தனது கணவர் நடராஜன் காலமானதால், அவரது இறுதிச் சடங்குக்காக 15 நாள் பரோலில் வெளிவந்துள்ளார். இப்போது தஞ்சையில் உள்ள நடராசனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா, கணவரின் இறுதிக் காரியங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.
இதனிடையே பத்து நாட்கள் கழிந்து ஒரு நாளில் கணவர் நடராசனின் உருவச் சிலையை திறக்க வேண்டும் என எண்ணியுள்ளார் சசிகலா. ஆனால், அது உடனே நிறைவேறும் நிலையில் இல்லாததாலும், பரோலில் வந்துள்ளதாலும், அது உருவப் படம் திறப்பாக மாற்றம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வருடமும் நடராசன் பொங்கல் விழாவை நடத்தும் தஞ்சை தமிழரசி மண்டபத்திலேயே படத் திறப்பு நிகழ்ச்சியை நடத்தலாம் என அவர் கூற, அதன்படி வரும் 30ஆம் தேதி அந்த விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.
இந்தப் படத் திறப்பு நிகழ்ச்சியிலும், அதிமுக., பாஜக., தவிர மற்ற கட்சிகளை அழைக்கலாம் என்று யோசனை கூறப்பட்டுள்ளது. இந்தப் படத் திறப்பு நிகழ்வில் மற்ற அரசியல் கட்சியினரைப் பங்கு பெற வைக்கலாம் என சசிகலா கூற அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். வைகோ, சீமான், திருமாவளவன், நெடுமாறன் என தமிழ் பெயரிலான ஆதரவு இயக்கங்களை நடத்துபவர்கள் உள்ளிட்ட பலருக்கு தினகரன் தானே கைபேசியில் பேசி அழைப்பு விடுத்து, அவர்களின் வருகையை உறுதி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அதுபோல திமுக., செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது என்றும், அவரது வருகை உறுதி செய்ததும், அழைப்பிதழில் பெயர் அச்சடிக்கப் படும் என்றும் கூறப்படுகிறது.
ஆளும் தரப்பை எதிர்த்து அரசியல் நடத்தும் தினகரன், தனது கட்சிப் பெயரில் திராவிட எனும் பெயர் இல்லாமல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயர் சூட்டினார். இதனால் சிலர் அதிருப்தியில் இருந்தனர். அதைப் போக்கும் வகையில் அனைவரையும் அழைத்து, தனக்கு ஆதரவு இருப்பதாகக் காட்டிக் கொள்ள தினகரன் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், அரசியல் சார்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என சிறைத் துறை, சசிகலாவிற்கு நிபந்தனைகளை விதித்துள்ளது. இது, அரசியல் நிகழ்வா குடும்ப நிகழ்வா என்று தெரியாத அளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் போது அது அரசியல் நிகழ்ச்சியாகவே மாறிவிடும். எனவே இதில் சசிகலா கலந்து கொள்வாரா என்பது உறுதியாகத் தெரியவரவில்லை. அவ்வாறு கலந்து கொண்டால் ஏற்படும் சட்டச் சிக்கலை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் அவர் தனது வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறாராம். எனவே அடுத்த வாரம் மீண்டும் அரசியல் வட்டாரம் பரபரத்துக் காணப்படும் என்பது மட்டும் உறுதி.