“பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக சிவகாசியில் அச்சு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பள்ளி நோட்டுகள் தரமாக இருப்பதால் தனிமவுசு உண்டு. சென்றாண்டு கடும் பேப்பர் தட்டுப்பாடு இருந்தது.
வெளி மாநிலங்களில் இருந்து பேப்பர் வரத்து இல்லை. இந்தாண்டு அந்த பிரச்னை இல்லை. ஆனால் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் பாட நோட்டுகள் விலை உயரும்.
மெட்ரிக், சி.பி.எஸ்.சி., பள்ளிகள், கல்லுாரிகளுக்கு தேவையான நோட்டுக்கள் ஆர்டரும் கணிசமாக சிவகாசியில் குவிந்துள்ளது.இம்மாத இறுதிக்குள் தயாரிப்புகளை முடித்தாக வேண்டும் என்பதால் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
நடப்பு கல்வியாண்டின் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் முழுவதும் பாட நோட்டுகளின் விற்பனை சூடுபிடிக்கும்.
மாணவர்களுக்கு தேவையான பாட நோட்டுகளை தயார் செய்யும் பணி தற்போது சிவகாசியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் நோட்டுகள் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகின்றன.
நோட்டுக்கள் தயாரிக்க ஒயிட் பேப்பர், பைண்டிங் அட்டை, பசை உள்ளிட்ட மூலப்பொருட்கள் தேவை. இந்த ஆண்டு ஒயிட் பேப்பர் விலை டன்னிற்கு 5 முதல் 8 சதவீதமும், அட்டை போர்டு விலை 10 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதனால் நோட்டுகள் விலை உயரும் என நோட்புக் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.