சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 6 மணி தொடங்கி அடுத்த 24மணி நேரத்துக்கு குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான கடற்பகுதிகளில் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 60 கிமீ., வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மணிக்கு 50 கி.மீ., வேகத்துக்கு காற்று வீசும், கடலில் 3.5 முதல் 4.3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும். இதனால் தமிழகம் மற்றூம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எச்சரிக்கைச் செய்தி எட்டாத நிலையில், 45 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் முடிந்து இன்று அதிகாலை மீனவர்கள் பலர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.