கோவில்பட்டியில் திருமணம் மண்டபத்தில் ஜவுளி விற்பனைக்கு எதிர்ப்பு: தொழில் வர்த்தக சங்கத்தினர் புகார்

கோவில்பட்டியில் தனியார் திருமணம் மண்டபத்தில் பிரபல ஜவுளி நிறுவனம் மற்றும் நகைக்கடை சார்பில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்துவதற்கு தொழில் வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் பிரபல நிறுவனம் சார்பில் நாளை முதல் இம்மாதம் 9ஆம் தேதி வரை ஜவுளி, நகைக் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், விதிமுறைகளுக்கு புறம்பாக அனுமதி அளித்த திருமண மண்டப உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் அனுமதியளித்த திருமண மண்டப உரிமையாளர்கள் மீதும், சட்டவிரோதமாக செயல்படவுள்ள ஜவுளி மற்றும் நகைக்கடை நிறுவனத்தினர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் தலைமையில் தொழில் வர்த்தக சங்க உறுப்பினர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அவர் இதுகுறித்து வட்டாட்சியர், வணிகவரி அலுவலர், நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் ஜவுளி கடை வியாபாரிகள் ஆகியோர் கலைந்து சென்றனர்.