கோவை கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த பேரிடர் பயிற்சியாளர் கைது! முதல்வர் அவசர ஆலோசனை!

கோயமுத்தூர்: கோவையில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின் போது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை தனியார் கல்லூரி ஒன்றில் என்.எஸ்.எஸ் சார்பில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லோகேஸ்வரி என்ற மாணவி 2-வது மாடியில் இருந்து விழுந்தபோது, கட்டத்தின் நிழல்கூரை கழுத்தில் பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் அன்பழகனுடன் முதல்வர் பழனிசாமி இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

இதனிடையே, கோவையில் பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கோவை மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. வேதனை அளிக்கிறது. இறந்த மாணவியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம். இந்தப் பயிற்சிக்கும், பேரிடர் ஆணையத்துக்கும் தொடர்பில்லை. பயிற்சியாளர் எங்களிடம் முறையாக பயிற்சி பெற்றவர் இல்லை எனக்கூறியுள்ளது.

கோவை நரசிபுரம் தனியார் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார் லோகேஸ்வரி என்ற மாணவி. அந்தக் கல்லூரியில் தனியார் அமைப்பின் மூலம் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, கீழே மாணவர்கள் வலையை விரித்து கைகளில் பிடித்திருக்க, 2வது மாடியின் சுவர் தளத்தில் இருந்து கீழே குதிக்க பயிற்சியாளர் ஆறுமுகம் மாணவியிடம் கூறியுள்ளார். ஆனால், பயத்தினால் மாணவி ஒரு கையால் சுவரைப் பிடித்திருக்க, திடீர் என பயிற்சியாளர் அந்த மாணவியைத் தள்ளி விட்டுள்ளார். அப்போது, சன்ஷேடில் பட்டு படுகாயமடைந்த லோகேஸ்வரி உயிரிழந்துள்ளார். பாதுகாப்புக் கயிறு கட்டாமல், பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே தள்ளியதில் மாணவி உயிரிழந்ததார் என்று புகார் பதியப்பட்டது.