பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள பழைய பொருட்களை குவித்து வைத்திருக்கும் அறையில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. பள்ளியின் ஸ்டோர் ரூமில் இருந்து திடீரென கரும்புகை வரத் தொடங்கியதால், அந்த ஸ்டோர் ரூமை ஒட்டியுள்ள 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீ வகுப்பறைகளுக்கும் பரவியது. இதையடுத்து பள்ளியில் இருந்த அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக பள்ளியின் மற்றொரு வளாகத்துக்கு மாற்றப்பட்டனர்.
இரண்டு வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மிகுந்த போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர். இதனிடையே தீயணைப்பு உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர் ஆய்வு செய்தார்.