மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார், அவரை ஆக.14 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், தனியார் விடுதி உரிமையாளர் மற்றும் காப்பாளர் புனிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் தலைமறைவான விடுதி உரிமையாளர், நெல்லை மாவட்டத்தில் நீதிமன்றத்தில் சரண் அடைய இருந்த நிலையில், கிணற்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்நிலையில், விடுதிக் காப்பாளர் புனிதா தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசித் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று கோவை நீதிமன்றத்தில் புனிதா சரணடைந்தார். விசாரணைக்கு பின்னர் அவரை ஆக.14 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே நீதிமன்ற வளாகம் அருகே புனிதாவை கண்டித்து மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது புனிதாவை அவர்கள் தாக்கவும் முயன்றனர். ஆனால் அவருடன் பாதுகாப்புக்கு வந்த போலீஸார் அவர்களைத் தடுத்து, பாதுகாப்புடன் புனிதாவைக் கொண்டு சென்றனர்.