சென்னை: தி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது. இதில் திமுக., தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆக. 7ஆம் தேதி காலமானார். இந்நிலையில், திமுக.,வின் செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் முதலாவதாக கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.
முன்னதாக திமுக., செயற்குழுக் கூட்டத்தை கூட்டுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. செயற்குழு உறுப்பினர்களுடன், தலைமைக் கழக நிர்வாகிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.
மு.க.அழகிரியால் எழுந்துள்ள சூழல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப் படுகிறது. மு.க.அழகிரியை எக்காரணம் கொண்டும் கட்சியில் மீண்டும் சேர்க்கக் கூடாது என்று திமுக., எம்.எல்.ஏ., அன்பழகன் கருத்து தெரிவித்திருந்தார். இவர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கட்சி செயற்குழுவில் மற்ற உறுப்பினர்களின் கருத்துகள் குறித்து விவாதிக்கப் படும் என்று கூறப்படுகிறது.