திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றிலும் மாநகரம் முழுவதும் நேற்றிரவு பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வந்த காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றிலும், பைபாஸ் ரோடு, தாழையூத்து சாலையிலும் கொட்டி விட்டு சென்றிருக்கின்றார்கள்.
இன்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பொதுமக்கள் இவற்றைப் பார்த்துவிட்டு, போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பொதுவாக, கேரளத்தில் இருந்து இது போல் லாரிகளில் கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்து, தமிழகத்தில் பரவலாக போட்டுவிட்டுச் சென்றுவிடுவது வழக்கம். எனவே கேரளக் கழிவுகள் தான் இவை என்று பொதுமக்கள் கூறினர். ஆனால் இதனை போலீஸார் விசாரித்தபோது, அரசியல் பிரமுகர் ஒருவரின் பெயரை சிலர் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து நெல்லை மாநகராட்சி ஆணையர் நாராயணன், மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் ஆகியோருக்கு தகவல் அளிக்கப் பட்டது. இருப்பினும், அங்கிருந்து கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எதுவும் உடனே எடுக்கப் படவில்லை.