Marina Beach - 2026

சென்னை மெரினா கடற்கரையில் எவ்வித போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங் களையும் நடத்த அனுமதிக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி, தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஒரு நாள் போராட்டம் நடத்த அனுமதி தந்து, தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உடனடியாக மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதை அவசர வழக்காக ஏற்று விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, அன்றே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

பின்னர், இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அமர்வில் நடைபெற்று வந்தது. அப்போது மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதித்தால், தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என்று தமிழக அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப் பட்டது. மேலும், வள்ளுவர் கோட்டம், அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்துக்கு பின்புறம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளிட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் எதையும் நடத்தலாம் என்று தமிழக அரசு கூறியது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசின் மேல்முறையீட்டு மனுவையும் ஏற்றுக் கொண்டு, இனி மெரினாவில் எவ்விதப் போராட்டங்களோ ஆர்ப்பாட்டங்களோ நடத்த அனுமதி இல்லை என தீர்ப்பளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending