கன்னியாகுமரி மாவட்ட ஆசாரிபள்ளத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை டீன் தலைமையிலான குழுவினர் 18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள சோபனாவை நேடியாக சந்தித்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்க முடியுமா ? தொடர் சிகிச்சை அளித்தால் சோபனா மீண்டு வர முடியுமா ? என்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரை மீட்க முடியாத நிலை இருந்தால் உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவரை கருணை கொலை செய்ய முடியுமா ? என்பது குறித்தும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியை சேர்ந்த ஆதர்ஷா உயர் நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார்.
18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் எனது தாயார் சோபனா மகப்பேறு நேரத்தில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்று விட்டார்.
நான் பி.ஏ.ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.எனது தாயார் மருத்துவ சிகிச்சை மற்றும் எனது படிப்பு ஆகியவற்றிற்கு பணம் இன்றி தவித்து வருகிறோம்.
எனவே தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட எனது தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும்,தவறான சிகிச்சை அளித்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் எழுதி இருந்தார்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கப் படும் எனக் கூறினார்.
இதனையடுத்து நீதிபதிகள் பிறபித்த உத்தரவில், கன்னியாகுமரி மாவட்ட ஆசாரிபள்ளத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை டீன் தலைமையிலான குழுவினர் 18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள சோபனாவை அவரது வீட்டிற்கு சென்று நேடியாக சந்தித்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்க முடியுமா ?
தொடர் சிகிச்சை அளித்தால் சோபனா மீண்டு வர முடியுமா ? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரை மீட்க முடியாத நிலை இருந்தால் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை கருணை கொலை செய்ய முடியுமா ? என்பது குறித்து உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.