தி.க.வினரின் அராஜகம்: அரசு நடவடிக்கை எடுக்க ராம.கோபாலன் வேண்டுகோள்

திராவிடர் கழகத்தின் அராஜகம் மீண்டும் அரங்கேறுகிறது. தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று அவர்  வெளியிட்ட அறிக்கை:
நேற்று முன்தினம் சென்னையில் மூன்று பேர் வீட்டில் புகுந்து அவர்களை தாக்கி, அவமானப்படுத்தி, சமயச் சின்னங்களை அறுத்து திராவிடர் கழகம் மீண்டும் தனது அராஜகப்போக்கை தமிழகத்திற்கு நிகழ்த்தி காட்டியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்கெடுக்கவும், பொது அமைதியை குலைக்கவும் திட்டமிட்டு திராவிடர் கழகமும் அதன் தலைவர் வீரமணியும் கயவாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.
தமிழக முதல்வர் இவ்விஷயத்தை சீரிய கவனம் செலுத்தி, பொது அமைதிக்கு கெடுதல் விளைவிக்கும் திராவிடர் கழகத்தினரை அனைவரையும் கைது செய்ய காவல்துறைக்கு ஆணையிட வேண்டும். திராவிடர்கழகம் இந்துவிரோத, தேச விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நாடே அறியும். இதனால் சட்ட ரீதியாக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்துக்களை கிள்ளுக்கிரையாக நினைத்து திராவிடர் கழகம் தனது பழைய அராஜக போக்கை கையில் எடுத்திருக்கிறது. பிராமணர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய தீயோரின் செயல், அடுத்து ஆன்மிகக் கேந்திரங்களாக விளங்கும் ஆதினங்கள், மடங்கள், மகான்களின் ஜீவசமாதிகள் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல் திரும்பலாம் என எச்சரிக்கிறோம்.
திராவிடர் கழகத்தின் கீழ்த்தரமான செயலை இந்துக்கள் இனி பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தி.க. சமீபத்தில் தாலி அகற்றும் போராட்டத்தை விளம்பரப்படுத்தியவுடனே தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் தங்களது எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தினார்கள்.
நடுநிலையாளர்கள் இத்தகைய சமூக விரோத செயலை கண்டிக்கவும், அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இனி இந்துக்களிடையே செல்லுபடியாகாது. இவர்கள் வழியிலேயே இவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க இந்து சமுதாயம் துணிந்துவிட்டால், அது அரசியின் செயலற்ற தன்மையாகக் கருதப்படும். சட்டத்தை மக்கள் கையில் எடுக்கக்கூடாது என்றால், அரசாங்கம் தீயோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி நல்லோர்களை காக்கும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, தனி மனித உரிமைக்கு எதிராக செயல்பட்ட திராவிடர் கழகத்தினர் கடுமையாக தண்டிக்கும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.