சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவிய கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ்

03-04-15 Karur MLA News Photo 02 கரூர்: தன் தொகுதியில் உள்ள சிறுமியின் கண் அறுவை சிகிச்சைக்கு நிதி அளித்து உதவியுள்ளார் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாந்தோன்றி ஒன்றியம், கே.பிச்சம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் கணேசன் – குணா தம்பதியரின் மகள் நேத்ரா. இவர் இங்குள்ள குள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கண் பார்வை மங்கிவந்த நிலையில் உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று மருத்துவர் கூறியுள்ளார். இந்தத் தகவலைக் கேள்விபட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் தனது 47 வது மாத சம்பளத்தில் இருந்து ரூ 35 ஆயிரத்தை கண் அறுவை சிகிச்சை செய்ய கொடுத்து உதவினார். இதே போல் கே.பிச்சம்பட்டி துறையூர் ஸ்ரீ காளியம்மன் கோயில் திருப்பணிக்காக ரூ 5 ஆயிரமும், அதே பகுதியைச் சார்ந்த அருந்ததியினர் காலனியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயில் திருப்பணிக்காக ரூ 5 ஆயிரமும், கரூர் மகாத்மா காந்தி ரோட்டில் வசிக்கும் அ.தி.மு.க தொண்டர் முருகேசன் சிறு தொழில் செய்ய ரூ 10 ஆயிரமும் என ரூ 55 ஆயிரத்தை தனது சம்பளத் தொகையிலிருந்து ஜெயலலிதா பெயரில் கொடுத்தார். ஜெயலலிதா பெயரில் மாதந்தோறும் தனது சம்பளத்தை கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதி உறுப்பினர் எஸ்.காமராஜ் சமூக நலப் பணிகளுக்கு கொடுத்து வருகிறார். அவ்வகையில் தற்போது, தனது 47 வது மாத சம்பளத் தொகையை பள்ளி மாணவி கண் அறுவை சிகிச்சைக்காகவும், கோயில் திருப்பணிக்காகவும், அ.தி.மு.க தொண்டர் சுய தொழில் தொடங்கவும் கொடுத்துள்ளார். ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்கள், நரிக்குறவர்கள், திருநங்கைகள், பம்பை வாசிப்பவர்கள், விவசாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என தனது 46 மாத சம்பளத் தொகையைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.