மண் சரிவால் ஊட்டி மலை ரயில் 2 நாட்களுக்கு ரத்து

ஊட்டி:
மண் சரிவால், ஊட்டி மலை ரயில் இரு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று மாலை கொட்டிய மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைப் பாதையில் 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் குந்தா மற்றும் கெத்தை அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

அடர்லி-ல்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையேயும், கல்லாரிலும் மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், சில இடங்களில் மரங்கள் விழுந்ததாலும் ஊட்டி நோக்கி சென்ற மலைரெயில் கல்லாரில் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் கார் மற்றும் வேன் மூலம் ஊட்டி சென்றனர்.

மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் போக்குவரத்து நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர்-ஊட்டி இடையே ஓடும் பயணிகள் ரயிலும் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி ஏரிக்கு தண்ணீர் அதிகமாக வந்ததால் படகு இல்லத்தில் படகுத்துறை உள்ளிட்ட இடங்கள் தண்ணீரில் மூழ்கின. பாதுகாப்பு கருதி காலையில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மதியத்திற்கு பின்னர் மழை நீர் வடிந்ததால் மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. மிதி படகு, துடுப்பு படகுகளின் சவாரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.