விருதுநகர்:
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 10 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விருதுநகர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கள்ள நோட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு விருதுநகர் மற்றும் சிவகாசியில் 500 மற்றும் 100 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் கடந்த 18.2.2009 ல் விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகில் நின்று கொண்டிருந்த சிவகாசியைச் சேர்ந்த அமீர் அம்சா, எம்.புளியங்குளத்தைச் சேர்ந்த மனோகரன் ஆகிய இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சிவகாசியைச் சேர்ந்த செய்யது அக்பர், வெள்ளைச்சாமி, கருப்பையா, சுடலை ஆகியோர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500 கள்ளநோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இவர்கள் அளித்த தகவல்படி, கேரளா மாநிலம் புதிய துறையைச் சேர்ந்த சசி, செவரையை சேர்ந்த ரவி ஆகியோர் பிடிபட்டனர். பிடிபட்ட இவர்களிடம் இருந்து ரூ.67 ஆயிரத்து 500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளநோட்டு கும்பலுக்கு, செவரையைச் சேர்ந்த ஜெபஸ்டின் லேபஸ் என்பவர் கள்ள நோட்டு தயாரிக்க பண உதவி செய்ததும், கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்த சுனில் என்பவர் தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பிடிபட்ட இந்த 10 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை விருதுநகர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விருதுநகர் சார்பு நீதிபதி பத்மா இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அந்தத் தீர்ப்பில், குற்றம் சாற்றப்பட்ட 10 பேருக்கும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறை தண்டனை வழங்கி ஏககாலத்தில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
மேலும் அமீர் அம்சா, மனோகரன், செய்யது அக்பர், வெள்ளைச் சாமி, கருப்பையா, சுடலை ஆகியோருக்கு தலா ரூ.11 ஆயிரம் அபராதமும், சசி, ரவிக்கு ரூ.16 ஆயிரம் அபராதமும், ஜெபஸ்டின் லேபஸ், சுனில் ஆகியோருக்கு ரூ. 21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending