ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது குடும்ப சொத்து விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார்.
ஐதராபாத்தில் உள்ள தெலுங்குதேச கட்சி அலுவலகமான என்.டி.ஆர். பவனில் 5–வது ஆண்டாக நேற்று குடும்ப சொத்து விவரங்களை சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் வெளியிட்டார்.
அதன்படி சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து ரூ.61.25 கோடி என்றும் கடன் ரூ.15.30 கோடி என்றும் கடன் போக எஞ்சிய சொத்து மதிப்பு ரூ.45.95 கோடி என்றும் அவர் தெரிவித்தார்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்து விவரங்களை தனித்தனியாக பட்டியலிட்டு தெரிவித்த லோகேஷ் இதற்கு மேல் எங்களுக்கு சொத்து இருப்பதாக நிரூபித்தால் அதனை அவர்களே எடுத்துக் கொள்ளலாம் என்று சவால் விடுத்தார். மேலும் லோகேஷ் தெரிவித்தது
நாங்கள் ஹெரிட்டேஜ் பால் நிறுவனத்தை 1992–ல் தொடங்கினோம். 7 மாநிலங்களில் ஹெரிட்டேஜ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மொத்த மார்க்கெட் மதிப்பு ரூ.913 கோடி. இதன் 40 சதவீதம் பங்குதாரர்கள் வசம் உள்ளது.
இங்கு பால், காய்கறி விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.36 கோடி வருமானம் வருகிறது. இதுவே எங்கள் குடும்ப வருமானம் ஆகும். எங்கள் நிறுவனத்துக்கு அரசு எந்த சலுகையும் அளிக்கவில்லை. மாறாக ஹெரிடேஜ் மூலம் விவசாயிகள்தான் அதிகம் பயன் பெறுகிறார்கள்.
விவசாயிகளுக்கு மட்டும் ரூ.1238 கோடி கொடுத்து உள்ளோம். எதிர்காலத்தில் உலகம் முழுவதும் ஹெரிட்டேஜ் நிறுவனம் தொடங்க திட்டமிட்டு உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
லோகேஷ் வெளியிட்ட சொத்து விவரப்படி சந்திரபாபு நாயுடு பெயரில் மட்டும் ரூ.42 லட்சம் சொத்து உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது.
கடந்த ஆண்டு 77 லட்சத்துக்கு சொத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு மனைவி புவனேஸ்வரிக்கு கடந்த ஆண்டு ரூ.31 கோடி சொத்து இருந்தது. அது இந்த ஆண்டு ரூ.33.7 கோடியாக அதிகரித்து உள்ளது.
லோகேஷ் சொத்து மதிப்பு ரூ.7.67 கோடி. அவரது மனைவி பிராமணி சொத்து மதிப்பு ரூ.4.77 கோடி. சந்திர பாபு நாயுடுவின் நிர்மான ஹோல்டிங் பிரைவேட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.1.37 கோடி என வெளியிட்டார்.