ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லீபிகா புகார் அளித்திருந்தார். அதில், தன்னை தன் கணவர் சோம்நாத் பாரதி அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகவும் ஒருமுறை கொல்ல முயன்றதாகவும் அந்த புகாரில் லீபிகா குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் சோம்நாத் பாரதி முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடியானதால் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவும் தள்ளுபடியானது. எனவே, எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது.

அதன் பிறகும் விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சோம்நாத் பாரதி தலைமறைவாகி விட்டார்

இதற்கிடையில், தன் மீது மனைவி அளித்த புகார் தொடர்பான விசாரணையை குடும்ப சமரச மையத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், இவ்வழக்கில் போலீசார் தன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் சோம்நாத் பாரதி மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் இன்று மாலைக்குள் போலீசாரிடம் சரணடையும்படி சோம்நாத் பாரதிக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் முதலில் நீங்கள் சரணடையுங்கள். உங்கள் மனைவியின் புகார் தொடர்பாக குடும்ப சமரச மையத்துக்கு பரிந்துரைப்பது பற்றி பின்னர் முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் , இம்மனு மீதான மறுவிசாரணையை வரும் அக்டோபர் முதல் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending