அத்திவரதர் கோயில் வளாகத்தில் நிறைமாத கர்ப்பிணியான விஜயாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 31 முதல் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் பக்தா்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார்.
அத்திவரதர் பெருவிழாவின் 45-வது நாளான இன்று பன்னீர் ரோஜா நிறத்தில் நீல சரிகை பட்டாடையில் ராஜ மகுடம் அணிந்து, பல வண்ண மலர் மாலைகள் அணிந்தவாரு பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார்.
அருளாளன் அத்தி வரதரை தரிசிக்க இன்றுடன் இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் காஞ்சிபுரத்திற்கு குவிந்து வருகின்றனர்.
கடந்த 44 நாட்களில் சுமார் 90 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துச் சென்றனர்.
இந்நிலையில் அத்திவரதர் தரிசனத்திற்கு வந்த நிறைமாத கர்ப்பிணியான விஜயாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அத்தி வரதரைத் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நிறைமாத கர்ப்பிணி விஜயாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு அவருக்கு சுகப்பிரசவம் நடைபெற்று 3 கிலோ எடையுள்ள அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.