
உலகெங்கும் செல்பி மோகத்தால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்தும் கேட்டும் வருகிறோம்.
குறிப்பாக உயிருக்கு ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படும் சோகமான சம்பவங்களும் நடந்து வருகின்றன
இந்த நிலையில் சென்னை அருகே ஒரு பாழடைந்த கிணறு அருகில் செல்பி எடுக்க முயன்ற ஒரு ஜோடி அந்தக் கிணற்றில் விழுந்த சம்பவத்தில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்

சென்னை பட்டாபிராமன் பகுதியைச் சேர்ந்த அப்பு என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மெர்சி என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்கள் இருவருக்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்னை வண்டலூர் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி அந்த பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் அமர்ந்து செல்பி எடுக்க முயன்றனர்
அப்போது எதிர்பாராதவிதமாக அப்பு கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
அவரை பிடிக்க முயன்ற மெர்சியும் கிணற்றுக்குள் விழுந்தார்.
இருவரது அலறல் சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால் பொதுமக்களால் அப்புவை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
மெர்சி தண்ணீருக்குள் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உயிரிழந்த மெர்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
செல்பி மோகத்தால் பரிதாபமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவரின் உயிர் போனது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செல்பி எடுப்பவர்கள் தகுந்த பாதுகாப்புடன் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அறிவித்து வந்தும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் வருந்ததக்க நிகழ்வாக இருந்து வருகிறது.