“நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?’

“நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?’

தம்பதிகளின் ஆசையை பூர்த்தி செய்த மகான்

கட்டுரையாளர்- பி. ராமகிருஷ்ணன்

குமுதம் பக்தியில் ஒரு பகுதி.

பரமாசார்யா காஞ்சி மடத்துல இருக்கற சமயத்துல அவரை தரிசனம் பண்ண பல ஊர்கள்ல இருந்தும் நிறையப்பேர் தினமும் வருவா. அதுவும் விசேஷ நாள்னா கேட்கவே வேண்டாம். கூட்டம் திமிலோகப்படும். மடத்து சிப்பந்திகள் இங்கேயும் அங்கேயுமா நின்னுண்டு வரிசையை கட்டுப்படுத்திண்டு இருப்பா.

ஒரு சமயம் மகரசங்கராந்தி அன்னிக்கு அதே மாதிரி ஆயிரக்கணக்கானபேர் பெரியவாளை தரிசனம் பண்றதுக்காக மடத்துல குவிஞ்சிருந்தா! அனுமார் வால் மாதிரி நீண்டு இருந்த வரிசையை, மடத்து சிப்பந்திகள் கிரமப்படுத்தி, உள்ளே அனுப்பிண்டு இருந்தா.

அந்த கூட்டத்துல ஒரு தம்பதி நின்னுண்டு இருந்தா. அவாளைப் பார்த்தாலே முகம் முழுக்க ஏதோ ஒரு சோகம் நிரந்தரமா அப்பிண்டு இருக்கறது தெரிஞ்சது. ஆமையா நகர்ந்துண்டு இருந்த வரிசை கொஞ்சம் வேகமா நகராதா, சீக்கிரமா ஆசார்யாளை தரிசிக்க மாட்டோமாங்கற ஏக்கம் அப்பப்போ அவாகிட்டே எட்டிப் பார்க்கறதையும் உணர முடிஞ்சது.

கூட்டம் நகர, நகர நேரமும் சேர்ந்து நகர்ந்து உச்சிக்காலத்தை நெருங்கித்து. அந்த சமயத்துல அந்தத் தம்பதிகள் கிட்டே ஏதோ ஒர பரபரப்பு தொத்திண்டுது. ரெண்டுபேரும் எதையோ முணுமுணுத்துக்கறதும், குறுக்குல போயாவது பெரியவாளை தரிசிக்க ஏதாவது வழி இருக்குமான்னு அங்கேயும் இங்கேயுமா எட்டி எட்டிப் பார்க்கிறதுமா நிலைகொள்ளாம தவிச்சாங்க. அந்த சமயத்துல அங்கே இருந்த மடத்து சிப்பந்தி, அவாளை ஒழுங்கா நில்லுங்கோ… இப்படி நகர்ந்து நகர்ந்து மத்தவாளுக்கு இடைஞ்சல் பண்ணாதீங்கோன்னு மென்மையா சொன்னார்.

சட்டுன்னு தன்னோட கையில் இருந்த மஞ்சப்பையை உயர்த்தி அந்த சிப்பந்திகிட்டே காட்டினார் அந்த ஆசாமி. “பெரியவா எங்கிட்டே கேட்டதை எடுத்துண்டு வந்திருக்கோம். அவர் பிட்சாவந்தனத்துக்கு போறதுக்கு முன்னால குடுத்துடணும்னு தான் பரபரப்பா இருக்கோம். நீங்க கொஞ்சம் தயசு வைச்சா, கொஞ்சம் முன்னால போய் அவர்கிட்டே குடுத்துடறோம்..’ சொன்னார்.

அவர் காடிடன பைக்கு உள்ளே உருண்டையா ஏதோ இருக்கறது தெரிஞ்சுது. “என்ன கூட்டம் நெறைய இருக்கறதால சுலபமா பார்க்கறதுக்கு வழி தேடறேளா… பெரியவா கேட்டதை எடுத்துண்டு வந்திருக்கோம்னு சொல்லி ஏமாத்தப்பார்க்கறேளா? அதெல்லாம் விடமுடியாது..’ கண்டிப்பாகவே சொன்னார் மடத்து சிப்பந்தி.

“இல்லை.. பொய் சொல்லலை… ஆசார்யா நேத்து எங்க ரெண்டுபேரோட கனவுலயும் வந்து கேட்டார்! அதனாலதான் இந்தக் கொய்யாப்பழத்தை எடுத்துண்டு வந்திரக்கோம்!’ கெஞ்சலா சொன்னா, அந்த தம்பதி.

“யார்கிட்டே கதைவிடறேள்? பெரியவா ஒரு வார்த்தை சொன்னா வண்டிவண்டியா பழத்தைக் கொண்டு வந்து குவிக்க பல பெரிய மனுஷா தயாரா இருக்கா. அப்படி இருக்கறச்சே.. அவர் உங்ககிட்டே கேட்டாரா? அதுவும் கனவுல வந்து இந்த ஒரே ஒரு கொய்யாப்பழத்தைஎடுத்துண்டு வரச்சொன்னாராக்கும்?

வழியில சாப்பிடறதுக்கு வாங்கி வைச்சதை பெரியவா கேட்டான்னு சொல்லிட்டு முன்னால போகலாம்னு பார்க்கறேளோ?’ முன்னால பின்னால இருந்த யாரோ குரல் எழுப்பினா.

அவ்வளவுதான், பேசாம தலையைக் குனிஞ்சுண்டு நின்னுட்டா அந்த தம்பதி. “அவர்தானே கேட்டார்? அதை எப்ப வாங்கிக்கணும்னு அவருக்கே தெரியும்.. நாம் ஏன் அவசரப்படணும்?’ மெதுவா முணுமுணுத்தார் அந்தப் பெண்மணி.

ஆச்சு, மெதுவா நகர்ந்து நகர்ந்து பெரியவாளை அந்தத் தம்பதி தரிசிக்கிற முறை வந்தது. ஆம்படையானும், பொண்டாட்டியுமா ஆசார்யா கால்ல விழுந்தா, பிரசாதத்தை வாங்கிக்கறதுக்காக கையை நீட்டினா.

பிரசாதத்தைக் குடுக்கறக்கு பதிலா, “என்னைப் பார்த்ததும் வந்த வேலையை மறந்துட்டியா? நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?’ பெரியவா கேட்க, எல்லாரும் அதிர்ந்துபோனா. அவா பொய் சொல்றதா குரல் எழுப்பினவா தலையை குனிஞ்சுண்டா.

அவசர அவசரமா, மஞ்சப்பையில இருந்த கொய்யாப் பழத்தை எடுத்து நீட்டினார் அந்த ஆசாமி. ஆசார்யா தன் பக்கத்துல இருந்த சீடரைப் பார்த்தார். அதோட அர்தத்தை புரிஞ்சுண்ட அந்த சீடர் சட்டுன்னு ஒர மூங்கில் தட்டை நீட்டி அந்தப் பழத்தை வாங்கி, கொஞ்சம் ஜலம் விட்டு அலம்பிட்டு ஆசார்யா பக்கத்துல வைச்சார். கனிஞ்சிருந்த அந்தக் கனியை கனிவோட எடுத்து பெரியவா மென்மையா ஒரு அழுத்து அழுத்தினார்.

கிருஷ்ணரோட கால் படறதுக்காவே காத்துண்டு இருந்த யமுனை அவரோட பாதம் பட்டதும் பட்டுனு விலகி வசுதேவருக்கு வழிவிட்ட மாதிர, பரமாசார்யாளோட கரம் படறதுக்காகவே காத்துண்டு இருந்த மாதிரி அந்தக் கொய்யாப்பழம் சட்டுன்னு இரண்டு விள்ளலா பிளந்துண்டுது.

அடுத்து யாருமே எதிர்பார்க்காதபடி, செவேல்னு இருந்த அந்தப் பழத்துல ஒரு பாதியை அப்படியே வாயில போட்டுண்டுட்டார், பெரியவா. இனனொரு பாதியை அந்தத் தம்பதிகிட்டே கொடுத்தார்.

“நீயும் உன் ஆம்படையாளும் சாப்பிடுங்கோ.. எதை நினைச்சு ஏங்கறேளோ அது கிடைக்கும்!’ ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்.

எல்லாருக்கும் இப்போ அந்த தம்பதிமேல தனி மரியாதை வந்துது. எது மேலயுமே பற்றோ ஆசையோ வைக்காத ஆசார்யா, இவா கொண்டு வந்த பழத்தை வாங்கி, உடனே சாப்பிடறார். மீதியை பிரசாதமாவும் தர்றார்னா, இவா எவ்வளவு பெரிய பாக்யம் பண்ணியிருக்கணும்னு பேசிண்டா.

அவா செஞ்ச பாக்யம் என்ன? பெரியவா அவாளுக்குத் தந்த வரம் என்னங்கறது, சரியா ஒரு வருஷம் கழிச்சு அதே தம்பதி மறுபடியும் ஆசார்யாளை தரிசனம் பண்ண வந்தப்போ தெரிஞ்சுது. ஆமா, இப்போ அவா கையில, பிறந்து ஒண்ணு ரெண்டு மாசமே ஆன குழந்தையும் இருந்துது. தழுதழுப்போட குழந்தையை பெரிவா காலண்டையில போட்டுட்டு ரெண்டுபேரும் நமஸ்காரம் பண்ணினா.

“என்ன உங்க கோரிக்கை நிறைவேறிடுத்தா?’ கேட்கலை மகா பெரியவா.. அவரோட புன்னகையே அதை எல்லாருக்கும் உணர்த்தித்து.

ஆசையே இல்லாத மகான், ஆசையா கேட்கறாப்புல ஒரு கொய்யாப்பழத்தைக் கேட்டு, அதையே ஆசிர்வாதமா தந்து அந்தத் தம்பதியோட ஆசையை பூர்த்தி செஞ்சிருக்கார்னா, அவரை பகவானோட அவதாரம்னுதானே சொல்லணும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Latest Posts

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

19,155FansLike
374FollowersFollow
64FollowersFollow
0FollowersFollow
2,519FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-